Advertisment

தமிழகத்தின் முதல் பெண் ஆட்சியர் மீது நடத்தப்பட்ட ஆசிட் வீச்சு..! - நாட்டை உலுக்கிய கொடூர சம்பவத்தின் பின்னணி!

First acid attack on first female IAS

19 மே 1992 அன்று தமிழகத்தின் முதல் ஆசிட் வீச்சு சம்பவம் அரங்கேறியது. அதுவும், சாமானியர்களால் நெருங்கமுடியாத அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்திரலேகா மீது மர்ம நபர்களால் ஆசிட் வீசப்பட்டது நாட்டையே உலுக்கியது. பட்டப்பகலில் பரபரப்பான சென்னை எக்மோர் சிக்னலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகளைப் பிடிப்பதில் அரசு மெத்தனம் காட்டியது. காரணம் ஜெ. தான் எனப் பேசப்பட்டாலும் அதை அவர் அடியோடு மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் நக்கீரன் புலன் விசாரணையில் இறங்கியது. காவல்துறை கை விரித்த இந்த வழக்கில் நக்கீரனின் விசாரணை பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அதில் முக்கிய தகவல்கள் 25.06.1992 தேதியிட்ட இதழில் கட்டுரையாக வெளியானது.

Advertisment

First acid attack on first female IAS

சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் ராஜகோபால் தன் மீசையிலும் இறுக்கமான உடையிலும் ஸ்டைலிலும் வேகப் பேச்சிலும் கோபக் கண்களிலும் வளர்ந்து வரும் போலீஸ் துறை சூப்பர்-ஸ்டார் என தன்னைக் காட்டிக்கொள்பவர்.

அவரே சொல்லி விட்டார். ‘‘ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகா மீதான கொலை முயற்சி வழக்கில் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல முடியவில்லை’’ என்று. சென்னைக் காவல்துறையின் துப்பறியும் திறமை குறைந்து விட்டதா? அல்லது குற்றவாளிகள் மாயமாய் மறையும் சக்தி படைத்தவர்களா? என்று எழுந்த கேள்விகளுக்கெல்லாம் ‘இருக்காது இருக்காது’ என்றே பதில் கிடைத்தது. அப்படியானால் காவல்துறை அதிகாரிகளுடைய கண்களை மூடும் அளவு, காதுகளை அடைக்கும் அளவு, கைகளைக் கட்டிப் போடும் அளவு என்ன நடந்தது? என்பதை அறிய மளமளவென விசாரணையில் இறங்கியபோது திடுக்கிட்டுப் போனோம்.

சந்திரலேகா:-

Advertisment

இராணுவஅதிகாரியின் மகள். உணவோடு தைரியத்தையும் சேர்த்த சாப்பிட்டு வளர்ந்த ஒரு பெண் அதிகாரி. 25.07.1947 ஆம் ஆண்டில் பிறந்த சந்திரலேகா 22.07.1971 –ல் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பதவியில் அமர்ந்தார்.

அவரது நேர்மையும் துணிச்சலான நடவடிக்கைகளும் எம்.ஜி.ஆரைப் பெரிதும் கவர்ந்தது. அச்சமயத்தில் ஜெயலலிதாவை அரசியலுக்குக் கொண்டு வர எம்.ஜி.ஆர். விரும்பியபோது சந்திரலேகாவைத்தான் இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்.

‘ஜெ – சந்திரலேகா’ நட்பு பலமானது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சந்திரலேகா பழி வாங்கப்பட்டார். ‘ஜெ’ ஆட்சிக்கு வந்தபிறகு சந்திரலேகாவை டிட்கோ சேர்மனாகப் பதவி தந்து மகிழ்ந்தார். அதற்குப் பிறகுதான் பிரச்னையே. ஸ்பிக் நிறுவனத்தை எம்.ஏ.சிதம்பரம் ஏ.ஸி.முத்தையா போன்ற கோடீஸ்வரர்களின் பிடியிலிருந்து மீட்டது தி.மு.க.அரசு. காலம் காலமாய் பதவி சொகுசையும் கோடி கோடியாக பணத்தையும் சுரண்டி வந்தவர்களின் கொட்டம் தி.மு.க.வால் அடக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் - ஜெயலலிதா முதல்வர்.

இந்தக் கும்பல் அப்படியே ‘ஜெ’விடம் சரணடைய காணிக்கையைப் பெற்றுக் கொண்ட ‘ஜெ’ விதிமுறைகளை மீறினார். அரசு சட்டத் திட்டங்களையெல்லாம் தூக்கிஎறிந்து விட்டு ‘‘ஸ்பிக்கையும், அதைச் சார்ந்த தொழிற்சாலைகளையும் முத்தையா குடும்பத்தினருக்குக் கொடு. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்’’ என அதிகாரி சந்திரலேகாவுக்கு ஆணையிட்டார்.

முழுக்க முழுக்க ஃபோர்ஜரி வேலைகளில் இறங்க விரும்பாத சந்திரலேகா இது தவறு என வாதாடிய போதும் உண்மையைக் கேட்க ஆளில்லை. விளைவு! மறுப்பு.

மறுப்பால் கோபமான ‘ஜெ’ சந்திரலேகாவை வேறு துறைக்கு மாற்றினார். இவ்வளவும் அரசியல் அறிந்த அனைவரும் அறிந்த செய்திதான். இதற்கு மேல் நடைபெற்ற சம்பவங்கள்தான் எல்லோரையும் சினம் கொள்ள வைக்கும் விஷயங்கள்.

First acid attack on first female IAS

துறை மாறிய சந்திரலேகா இதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், கடுமையான கோபம் அவருக்கு. கோபம் வந்ததின் விளைவு தனக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவரிடம் போனில் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டாராம், ‘‘அவள் ஒரு குரங்கு மனுஷி’’ (MONKEY WOMAN) நாம் ஏற்கெனவே ‘வாட்டர்கேட் ஊழல்’ என்ற பெயரில் தமிழக பிரபலமானவர்களின் போன்கள் எல்லாம் டேப் செய்யப்படுகின்றன என்பதை ஆதாரத்துடன் தெள்ளத் தெளிவாக எழுதினோம். அதற்காக நம்மைக் கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. இப்பொழுது டேப் செய்யப்படும் போன்களின் வரிசையில் அதிகாரிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் சந்திரலேகாவின் ‘குரங்கு மனுஷி’ என்ற விமர்சனம் டேப்பாக ‘ஜெ’ முன்பாக போட்டுக் காண்பிக்கப்பட்டது. பொறுப்பாரா ஜெயலலிதா? தன்னைக் கேவலமாக விமர்சித்த ஒரு சாதாரண ஐ.ஏ.எஸ்.அதிகாரியை விட்டுவிடுவாரா அவர்? ‘‘என்னைக் குரங்கு என்று விமர்சித்த இவளை குரங்கு போல் ஆக்க வேண்டும்’’ என சதித் திட்டம் தீட்டினார். திட்டம் வெற்றியடைந்தது. ஆனால் ‘ஜெ’ ஆசைப்பட்டது போல் அல்லாமல் சந்திரலேகாவின் அழகான முகம் இன்னமும் அழகாகத்தான் உள்ளது.

உடலில் மட்டும் ஆசிட் தந்த எரிச்சலால் சில பகுதிகள் கருகிப் போயுள்ளன. அது சம்பந்தமாக சந்திரலேகா குடும்ப நண்பர்களிடம் நாம் விசாரித்த போது இவ்வாறு கூறினார்கள். சந்திரலேகா போனில் திட்டியது உண்மைதான். ஆனால் குரங்கு மனுஷி என்று கூறவில்லை. ‘பல்க்கி வுமென்’ (குண்டான மனுஷி) என்றுதான் சொன்னார்.

குரங்கு மனுஷி! குண்டான மனுஷி! என்ற வார்த்தை அர்த்த வேறுபாடுகள் ஒருபுறமிருக்க பட்டப்பகலில் நட்ட நடுத்தெருவில் ஆசிட் வீசப் பயன்பட்டவர்கள் யார்? அவர்களை இயக்கிய இன்னொரு சக்தி எது? என்ற தனி விசாரணையை நாம் தொடர்ந்த போது சமுதாயத்தில் பெரிய மனிதர் போர்வையில் திரியும் சிலரின் மூஞ்சிகள் கழிந்தன.

எம்.ஜி.ஆர்.காலம்.

சென்னை இந்திரா நகரில் பிரேமா என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி கொலை செய்யப்படுகிறார். குற்றவாளி யார் என்று தமிழகம் முழுவதும் எழும்பிய கேள்விப்புயல் சட்டமன்றத்திலும் வீசியது. தி.மு.க. உறுப்பினர் ரகுமான்கான் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் பார்த்து கலெக்டரின் மனைவி கொலைக்கு காரணம் உங்கள் நண்பர்தானே? என்று கேட்டார்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருந்தது. யார் அந்த நண்பர் என்பது அனைவரும் அன்று அறிந்ததுதான். அவர்தான் எம்.ஏ.எம்.ராமசாமி. சென்னை குதிரை ரேஸ் புகழ் மன்னர் எம்.ஏ.எம்.ராமசாமி ஆசியின் கீழ் ஒரு மாஃபியா கும்பலே செயல்பட்டுக் கொண்டிருகிறது என்ற செய்தி உளவுத்துறையின் அன்றைய ரிப்போர்ட். இதனுடைய பெண் அணித் தலைவி சுசீலா. பழனி தாலுக்காவைச் சேர்ந்த காட்டுப்பட்டி அருகே பிறந்து வளர்ந்தவள்.

பிரபல கொள்ளையர்களான பில்லா ரங்காவுடன் தொடர்பு கொண்டு சென்னையில் வைர வியாபாரிகளிடம் மொத்தமாக வாங்கும் வைரங்களை கறுப்புப்பணப் பேர்வழிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் மனைவிகளிடம் நல்ல விலைக்கு விற்று விடுவாள். மறுநாளே அந்த மனைவிகளிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி வைர நகைகளை கொள்ளையடித்து திரும்பி விடுவாள். சுசீலாவுக்கு இணங்காத பிரேமா படுகொலை செய்யப்படுகிறாள். இப்படிப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் சந்திரலேகா மேல் ஆசிட் வீசியது.

நோக்கம் கொள்ளையோ கொல்வதோ அல்ல. முகத்தை விகாரப் படுத்துவதுதான். மும்பையைச் சேர்ந்த இந்தக் கும்பலில் மர்ரே, அண்ணாமலை என்ற இருவர் சென்னை போலீசால் கைது செய்யப்பட்டு விட்டனர். கும்பலின் தலைவனான சுகுணாவும் அவனது சகாக்களும் இன்னமும் பிடிபடவில்லை. இவர்களை இந்தப் பணிக்கு அமர்த்தியவர் எம்.ஏ.எம்.ராமசாமி. இவருக்கு இந்த வேலையைக் கொடுத்தவர் ஜெயலலிதா. ‘ஜெ’வை விட பணக்காரராக இருந்தும் எம்.ஏ.எம்.மால் இதைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. வருடந்தோறும் தமிழக மின் வாரியத்துக்கு முன்னூறு கோடி ரூபாய் நிலக்கரி சப்ளை செய்யும் காண்ட்ராக்டை இவருக்கு வாரி வழங்கியவர் ஆயிற்றே ஜெயலலிதா.

போயசில் தீட்டப்பட்ட சதி ராமசாமி மூலம் பம்பாய் சென்று சந்திரலேகா மேல் ஆசிட் வீச்சில் முடிந்துள்ளது. இந்த விபரங்கள் போலீஸ் துறைக்குத் தெரியாதா என்ன? தெரிந்ததன் விளைவுதான் எம்.ஏ.எம். ராமசாமி தற்சமயம் இந்தியாவில் இல்லை. இந்தியாவின் தத்துவ ஆசான் என அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்யாயனின் நூற்றாண்டு இது. அந்த மாமேதையின் நூற்றாண்டில் அவர் கொடுத்த மனித இன வரலாற்றில் வர்க்க, ஜாதி, பேதம், ஒழிந்து முன் செல்ல வேண்டுமென நாமெல்லாம் நினைக்கிறோம். அதேசமயம் அவர் எழுதியுள்ள ஆதிவாசிகள் பற்றிய பகுதியில் சிறிய தகராறுக்காக உடனிருந்து ‘களித்த’ பெண்ணை கொடூரமாக சாகடித்து நர மாமிசம் உண்ட வரலாற்றை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும் என ஜெயலலிதா நினைத்து விட்டாரோ என்னமோ?

ஒரு குழந்தைக்குத் தாயான சந்திரலேகாவின் முகத்தை அழிக்க நினைத்த அந்தக் கொடூர சிந்தனைக்குச் சொந்தக்காரியா மூன்றரைக் கோடி தமிழ்ப் பெண்களை காப்பாற்றப் போவது?

அவமானம்!...... அவமானம்!

admk jeyalalitha
இதையும் படியுங்கள்
Subscribe