Advertisment

ஜெயக்குமார், மதுசூதனன் இடையே நடந்த ஜுனியர் -  சீனியர் மோதல்!

feud between jayakumar and madhusudanan in early 90s

feud between jayakumar and madhusudanan in early 90s

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பது எழுதப்படாத ஒரு விதி. இது இரு வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கு இடையே மட்டுமில்லை, ஒரே கட்சிக்குள் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். ஒரே கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு அல்லது மோதல் சில சமயங்களில் பொதுவெளியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியாக பொதுவெளி வரை கொண்டுவரப்படும் சம்பவங்கள் மிகவும் அரிதே. ஆனால், வெளியில் தெரியாமல் கட்சிக்குள்ளேயே நடைபெறும் உட்கட்சி பூசல் என்பது அரசியலில் மிக சகஜம். இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்காக இருந்ததில்லை எனலாம். அந்தவகையில், அதிமுகவில் நடந்த இப்படியான ஒரு உட்கட்சி பூசல் குறித்து 23.11.1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

Advertisment

அடப்பாவி எம் பேரு தம்மாத்துண்டா!

நாட்டில் உள்ள பொதுவான அத்தியாவசியப் பிரச்சனைகளை விட தனது கட்சிக்காரர்கள் மந்திரிகள் மூலம் வரும் பிரச்சனையை தீர்ப்பதுதான் ஜெயலலிதாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

Advertisment

‘ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்கிற பழமொழி தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை சரியாகவே இருக்கிறது. அ.தி.மு.க.வின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருக்கும் மதுசூதனனுக்கு மந்திரி பதவி. அதேபோல் வடசென்னை பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டமீனவ சமுயத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கும் மந்திரி பதவி கொடுத்தார் ‘ஜெ.’

இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு வடசென்னையையே கலக்கிக் கொண்டுள்ளனர். விஷயம் போயஸ் கார்டன் வரை போயிருக்கிறது. வரவிருக்கும் மந்திரிகள் இலாகாப்பட்டியலில் இருவரின் இலாகா மாற்றம் உறுதி என்கிறது ஜெ வட்டாரம்.

ஆரம்பம் முதலே மா.செயலாளரும் மந்திரியுமான மதுசூதனன் அவரது ஆதரவாளரான திருவொற்றியூர் எம்.எல்.ஏ மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த குப்பனுக்காக மந்திரி பதவிக்கு கடும் முயற்சிகள் செய்தார். ஆனால் ‘ஜெ’வோ கட்சியில் சீனியாரிட்டி இல்லை என்றாலும் படித்த இளைஞரான ஜெயகுமாருக்கு மந்திரி பதவி கொடுத்தார். வனத்துறை, பால்வளம், சின்கோனா, கால்நடை, மீன்வளத்துறை போன்ற வளம்கொழிக்கும் பல கூடுதல் துறைகளுக்கான மந்திரி பதவிக்காக பல மூத்த மாஜி அமைச்சர்கள் ஆசைப்பட்டாலும் ‘ஜெ’ வோ யாரும் எதிர்பாராத வகையில் புதியவரான ஜெயக்குமாருக்குக் கொடுத்தார்.

மதுவுக்கு கைத்தறித் துறை அமைச்சர் பதவி கிடைத்தாலும் இப்படி செழிப்பான ஒரு துறை ஜெயக்குமாருக்கு போய் விட்டதே என்ற குறை இன்று வரை தீர்ந்தபாடில்லை அவருக்கு.

இருவரின் இந்தப் ‘பனிப் போர்’ அவர்களது ஆதரவாளர்கள் மூலம்தான் முதன் முதலாக தொடங்கி வைக்கப்பட்டது. ராயபுரம் தொகுதி இளைஞரணி செயலாளர் சா.ராஜேந்திரன் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். மந்திரி ஜெயக்குமாரின் முக்கிய சகாவான இவர் லோக்கல் போலீஸ் பஞ்சாயத்துகளை அமைச்சர் சார்பில் கவனிப்பவர். இவர் அடித்த போஸ்டரில் ஜெயக்குமார் பெயரை மட்டும் போட்டுவிட்டு மாவட்ட செயலாளர் மதுசூதனன் பெயரைப் போடவில்லை.

விஷயம் கேள்விப்பட்டு கோபம்கொண்ட மது ஜெயக்குமாரையும் அக்கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்று மா.செ. என்ற முறையில் கேட்டுக் கொண்டும், ஜெயக்குமார் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

‘சைலன்ட்’டாக இருந்த மது சரியான நேரத்துக்காக காத்திருந்தார். அதன்படி கட்சிப் பொறுப்பாளர்களை அழைத்து ‘ஜெ’ விசாரணை செய்த போது நகரசெயலாளரும் எம்.எல்.ஏ.வுமான குப்பன் ஆட்கள் மூலமாக ஜெயக்குமார் மீது புகார்கள் வைக்கப்பட்டது.

‘‘மீனவ சமுதாயத்துக்காக இவர் எதுவுமே செய்யவில்லை’’என்ற பொதுவான குற்றச்சாட்டைத் தவிர பெரிதாக அதில் வேறு ஒன்றும் இல்லை. பத்து நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை முன்பு இளைஞர் கோஷ்டி ஓன்று பெண்களைக் கிண்டல் செய்வதாக புதுவண்ணை போலீசுக்கு புகார் வர அவர்களைப் பிடித்துவந்து நையப் புடைத் தார்கள். அவர்களில் ஜெயக்குமாரின் உடன் பிறந்த சகோதரர் ராஜ்குமாரும் அடக்கம்.

உடனே ஜெயக்குமார் தரப்பிலிருந்து போலீசாருக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் மதுசூதனனோ ‘‘உங்கள் கடமையைச் செய்யுங்கள், எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று போலீசாருக்கு உற்சாக டானிக் கொடுத்திருக்கிறார்.

ராயபுரம் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் குடித்துவிட்டுக் கலாட்டா செய்த நாலு பேர்களை போலீஸ் பிடித்து வந்து கவனிக்க, மேற்படி நால்வரும் ஜெயக்குமாரின் உறவினர்கள் என்பதால் மறுநாள் போலீசாரை கோட்டைக்கு வரச்சொல்லி கடுமையாக ‘டோஸ்’ விட்டாராம் ஜெயக்குமார். போலீஸ் பிடியில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் யாராவது மாட்டினால் உடனே ஏக குஷியாகி அவர்களை நன்கு கவனிக்கச் சொல்லி ஏற்பாடுகைளை செய்துவிடுகிறது மது கோஷ்டி.

பிரச்சனைகள் அம்மா காதில் விழுந்து ‘ஜெ’ இருவரையும் அழைத்து கண்டித்ததுடன், ‘‘கட்சி முக்கியமா? பதவி முக்கியமா? கட்சி வளர்ந்தால்தான் பதவி வரும், ஆகையால் எக்காரணத்தை முன்னிட்டும் மாவட்ட செயலாளர் பெயரைப் போடாமல் கூட்டம் நடத்தக்கூடாது’’ என்று ஜெயக்குமாரிடம் செல்லமாக கண்டித்திருக்கிறார் ஜெ.

ஜெயக்குமாரின் புலம்பல்களுக்கு எல்லாம் ஆறுதல் சொல்வது அமைச்சர்கள் முத்துசாமியும், செங்கோட்டையனும்தான். ‘‘நாங்க இருக்கற வரைக்கும் உங்களுக்கு எதுவும் வராது.தைரியமாக இருங்கள்’’ என்று ஆறுதல் சொன்னார்களாம் இவ்விருவரும்.

"வனத்துறையில் சுமார் நாற்பது லட்சம் ஊழல், பால்பூத் டேங்கர் அமைச்சரின் உறவினர்கள் நான்கு பேர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஆதாரத்துடன் அம்மாவிடம் சொல்லப்போகிறோம், அமைச்சர் கோட்டா ‘லோன் பாரத்’தை எங்க தலைவரு கட்சிக்காரனுக்கு நிறைய கொடுத்திருக்காரு. ஆனா அங்க, ஜெயக்குமார் பி.ஏ.வே எல்லாத்தையும் அமுக்கிட்டாரு.அவங்க சொந்தக்காரங்களுக்கே முக்கா வாசி பாரத்தை கொடுத்துட்டாரு" என்கிறது மதுசூதனன் கோஷ்டி.

"ஆமா, இவருமட்டும் போலீஸ்துறை மந்திரியா தன்னை நெனைச்சுகிட்டு தன்னோட இஷ்டத்துக்கு அதிகாரிகள மாத்தலியா! ‘‘தலைமைக்கழக தகராறுல அம்மாவைத் தாக்கிய இன்ஸ்பெக்டர் டேவிட்டை இவரு சென்னை அசோக் நகருக்கு தன்னோட செல்வாக்குல மாத்தியிருக்காரு. இப்ப அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு போயி அவரைக் கடலாடிக்கு தூக்கி அடிச்சிட்டாங்க.

தன்னோட சகலையை பர்மா பஜார் ஸ்டேசனுக்கு போஸ்டிங் போட்டு பர்மா பஜாரையே கொள்ளையடிக்கிறாரு. ‘கலைஞர் சப்போர்ட்ல தலைவர் ஆட்சியில போலீஸ் சங்கம்’னு வச்சுகிட்டு தலைவரையே எதிர்த்த சீனுவாசன் என்கிற இன்ஸ்பெக்டர்தான் இவருடைய சகலை.

சகலையோட நண்பர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமிக்கும் சிட்டியில நல்ல கலெக்ஷன் சென்டரான கொத்தவால் சாவடி ஸ்டேஷனுக்கு மாறுதல் வாங்கிக் கொடுத்திருக்காரு. இப்ப சமீபத்தில் நம்ம கட்சியைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியரை ஒருத்தன் கொலை பண்ணிட்டான். அந்தக் கொலைகாரன் தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவன். அவனுக்கு சப்போர்ட்டா இவரு போய் போலீசுல பேசறாரு. இப்ப டி.ஜி.பி. இவரா, இல்லனா ஸ்ரீபாலா -வான்னு புரிய மாட்டேங்குது. எல்லாம் கொஞ்ச நாளையில அம்மா புரிய வைப்பாங்க" என்கிறது அமைச்சர் ஜெயக்குமார் கோஷ்டி.

இவ்வளவு கூத்து நடந்த பின்னும், ‘ஜெ’ இருவரையும் அழைத்துக் கண்டித்த பின்னும், இருவருக்குமுள்ள பனிப்போர் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை.

ராயபுரம் பகுதியில் தனது தொகுதி அலுவலகம் இரண்டைத் திறக்க அமைச்சர் ஜெயக்குமார் முடிவு செய்து மா.செயலாளர் மதுசூதனிடம் ‘டேட்’டும் கேட்டார். அதோ இதோ என மதுசூதனன் இழுத்தடித்துக் கொண்டே போக, முடிவில் தொகுதிச் செயலாளர் சோமசுந்தரம், கொள்கைப் பரப்புச் செயலாளர் செங்கோட்டையன் இருவரும் தலையிட்ட பிறகே ஒரு வழியாக தேதி கொடுத்தார் மதுசூதனன்.

சரி! பிரச்சனை இதோடு முடிந்து விட்டது என்று நினைத்தால் பழைய குருடி கதவைத் திரடி கதையாக மீண்டும், போஸ்ட்டரில் பெயர் போடும் பிரச்சனையில் சிக்கல்.

அண்ணே! ‘‘அவரு பேர் மட்டும் ‘இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும்’ பெருசா மேல போட்டுருக்கு. உங்களுக்கு மாவட்டம் அமைச்சர்னு ரெண்டு போஸ்டிங் இருந்தும் வேணுமின்னே உங்க பேரை சிறுசா கீழே போட்டுருக்காங்க’’ என்று தனது கோஷ்டியினர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மதுசூதனன் சரி....சரி!

பிரச்சனையை விடுங்க, நான் பாத்துக்கறேன் என்று கூறிவிட்டு அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசினார்! எப்படி?

காடு, மீன் அமைச்சர் அவர்களே! என்று ஜெயக்குமாரின் பெயரை சொன்னபோது கூட்டமே கிண்டலாகச் சிரித்தது. அமைச்சரின் முகத்தில் அசடு வழிந்தது.

இப்படியாக வடசென்னை பகுதி கட்சிக்காரர்கள் இந்த இரண்டு மந்திரிகளின் கோஷ்டி சண்டையில் முடியைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். இறுதியாக இருவரின் கோஷ்டிச் சண்டைகளும் ‘‘வாட்ச்-அப்’’ செய்யப்பட்டு மீண்டும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

admk App exclusive D JAYAKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe