Advertisment

ராணுவ நடவடிக்கைகளில் ஆந்திரா அகப்பட்ட காலம்..! கவிஞர் வரவர ராவின் நேர்காணல்!

 Exclusive Interview with varavara Rao

1967 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நக்ஸல்பாரி என்ற கிராமத்தில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினோர் பேர் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து எழுந்த விவசாயிகளின் போராட்டம் ' உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற முழக்கத்துடன் நாடெங்கும் ஓர் அரசியல் இயக்கமாக மாறியது. அந்த எழுச்சியால் ஈர்க்கப்பட்டவர்தான் தெலுங்கானாவைச் சேர்ந்த கவிஞரும், விப்லாவா ரட்சயாட்ல சங்கத்தின் (புரட்சிகர எழுத்தாளர் சங்கம்) மூத்த நிர்வாகியுமான வரவர ராவ். புரட்சிகர முற்போக்கு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மும்முரமாக இறங்கிய வரவர ராவ், மலைவாழ் மக்களின் நில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். அவர்களின் உரிமைக்காக நக்ஸல் இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்தும் தனது எழுத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து வந்தார்.

Advertisment

அறுபதுகளின் பிற்பகுதியில் நக்ஸல்பாரியின் போராட்ட தீ ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. 1969ம் ஆண்டில் தெலங்கானா மாநிலப் போராட்டத்தைத் தொடர்ந்து, சமமான நில உரிமைகளுக்கான ஸ்ரீகாகுளம் ஆயுதம் தாங்கிய விவசாயிகள் போராட்டம் (1967-70) துவங்கியது. இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வரவர ராவ் தனது எழுத்துக்கள் மூலம் வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1973ம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசால் அப்போதைய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீண்டும் மிசா சட்டத்தின் கீழ் 1975இல் அவசரக் காலத்தின் உச்சத்தில் கைது செய்யப்பட்டார். 1977 தேர்தலில் இந்திரா காந்தி அரசு ஜனதா கட்சியால் கவிழ்க்கப்பட்டபோது அவர் விடுதலை செய்யப்பட்டார். 1985ம் ஆண்டு செகந்திராபாத் சதி வழக்கு (கிட்டத்தட்ட 50 பேர் ஆந்திர மாநிலத்தை கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்) உட்பட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டே, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், ராம் நகர் சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தொடர்ந்து பல அடக்குமுறைகளையும் வழக்குகளையும் எதிர்கொண்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் கவிஞர் வரவர ராவ், 1992 ஆம் ஆண்டு சென்னை வந்திருந்த போது நக்கீரனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி 01.02.1992 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளியானது.

Advertisment

 Exclusive Interview with varavara Rao

ஆந்திர நக்சல்பாரிகள், வரவரராவ்.

ஆந்திராவின் புரட்சிகர எழுத்தாளர். இயக்கத்தின் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர். ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தில் ஒரு லெக்சரராக இருந்தவர். ஆந்திராவின் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்காக பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து ஓரிரு வருடங்கள் சிறைவாசம் சென்றவர். சமீபத்தில் தெலுங்கானா வாரங்கல் மாவட்டங்களில் நக்சல் பாரிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் மத்தியப் படை வீரர்கள் தேடும் வேட்டையை தொடங்கியுள்ளனர். இந்திய அரசின் தீவிர இராணுவ நடவடிக்கையில் அஸ்ஸாமை அடுத்து ஆந்திரப்பிரதேசம் மாட்டியுள்ளது. ஆந்திராவிலிருந்து சென்னை வந்த வரவரராவ் நக்கீரனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

நக்கீரன்:

ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் போராட்டத்தை எப்படி மக்கள்போராட்டம் என்கிறீர்கள்? நக்ஸல் பாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள போராட்டம்தான் என்ன?

ராவ் பதில் :

நான் ஒரு மார்க்சிய-லெனினிய எழுத்தாளன் என்ற ஸ்தானத்தில் இருந்து ஆந்திராவில் நடக்கும் சில அவலங்களையும் போராட்டங்களையும் சொல்ல முடியும். ஆனால், நான் எந்த ஒரு நக்ஸல் இயக்கத்துக்கும் ‘ஸ்போக்ஸ்மேன்’ ஆகப் பேசவில்லை. ஸ்ரீகாகுளம் தெலுங்கானா போராட்டத்தில் இருந்து இன்றுவரை மலைஜாதி மக்களையும், தலித் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்காக ஒரு நீண்ட நெடிய போராட்டத்தைத் தொடங்கியது நக்ஸல் இயக்கம்தான். ‘‘நிலம் சுதந்திரம் சுயமரியாதை’’ இதற்காகத்தான் அந்தப் போராட்டம் தொடர்கிறது.

தெலுங்கானா போராட்டத்தில் இடதுசாரிகளையும், எமெர்ஜென்சியின் போது குறிப்பிட்டு நக்ஸல் பாரிகளையும் அடக்கி ஒடுக்கினார்கள். மீண்டும் துளிர்த்து எழுந்தது போராட்ட இயக்கம். ஆனால், இந்த வருடம் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அளவுக்கதிகமாகப் போய் விட்டது. பதினான்கு இலட்சம் விவசாயக்கூலிகளை ஒன்று திரட்டி நாங்கள் ஒரு மாநாட்டை நடத்தியதால் காங்கிரஸ் அரசாங்கம் பயந்து போனது. இந்திராகாந்தி இருபது அம்ச திட்டத்தைக் கொண்டுவந்தபோது நிலமில்லாத வர்களுக்கு நிலம் கொடுப்போம் என்றார். யாரும் ஐம்பத்திநான்கு ஏக்கருக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்றார். ஆனால் பல நிலப் பிரபுக்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வைத்திருந்தனர். காங்கிரஸ்காரர்களே அதிகமான நிலங்களை வைத்திருந்தனர். இப்பொழுது பிரதமராக இருக்கும் நரசிம்மராவே 145 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தார். அவருடைய நிலங்கள் அனைத்தும் மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டது. ஆனால், நரசிம்மராவ் பிரதமரான பிறகு விவசாயம் செய்து வந்த கூலிகளை அடித்து விரட்டிவிட்டு பல முகாம்களை அமைத்து அப்பாவிகளை வேட்டையாடிக் கொண்டு வருகின்றனர் போலீஸ்காரர்கள். வடக்கு தெலுங்கானாவில் மட்டும் ஆயிரம் கிராமங்களில் நிலமில்லாத ஏழைகளுக்கு அரசின் புறம்போக்கு நிலங்களையும், சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களையும் ஏழைகளுக்குப் பிரித்துக்கொடுத்து, சிவப்புக்கொடியை ஊன்றி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது மக்கள் போர் குழுதான்.

இப்பொழுதெல்லாம் பெரும்பான்மையான நிலப் பிரபுக்கள் நிலங்களை நிலமில்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்க அவர்களே முன்வந்து சட்டப்படி எழுதி வைக்கின்றனர். ஆனால், போலீஸ்காரர்கள் அதைத் தடுக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் நிலமாற்றம் நடந்திருந்தால் அது செல்லாது என்று அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் போலீஸ் மற்றும் எல்லைக்காவல் படைகள் நின்று கொண்டு அப்பாவிகளை மிரட்டுகின்றனர். பொதுக் கூட்டங்களுக்கு அனுமதியில்லை. அதையும் மீறிக் கூடியதால் பத்துப் பேரைச் சுட்டுக் கொன்றனர். தெலுங்கானாக் காடுகளில் ஏற்கெனவே மூன்று மத்தியப் படைகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தற்போது இந்தோ-திபெத்தியப் படைகள் வந்துள்ளன. அவர்கள் என்கவுன்டர் என்ற பெயரில் அப்பாவிகளையும் ஜனநாயக வாதிகளையும் சுட்டுத் தள்ளுகின்றனர்.

இரண்டாவதாக அடிலாபாத்தில் இருந்து வாரங்கல் மாவட்டம் வரை சுரங்கப் பகுதிகளில் சாராயம் விற்கக் கூடாது என்று எங்கள் மக்களே முடிவு செய்து நான்கு மாவட்டங்களில் சாராயக்கடைகள் அனைத்தையும் மக்களே மூடிவிட்டனர். இதனால் 7௦௦ கோடி அரசாங்கத்துக்கும் 15௦௦ கோடி சாராய வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டதால் அரசாங்கமே போலீஸ்காரர்களை வைத்து சாராயம் விற்பனை செய்கிறது. ஆனால் ஆந்திராவின் முதலமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தொழிற்சாலை பாதுகாப்புப் படையை அனுப்பி சாராயம் விற்கும் போலீஸ்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்.

நக்கீரன்:

ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்த மட்டுமே உங்களுக்குத் தெரியும். மக்களைத் திரட்டிப் போராடுவதில் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வீசப்படுகிறதே?

ராவ் பதில் :

இல்லை. லட்சக்கணக்கான மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஆனால், கொடூரமான ஆயுதங்கள் எங்கள் நெஞ்சுக்கு முன்னால் நீட்டியிருக்கும் போது எப்படி மக்களைத் திரட்டி தெருவுக்குக் கொண்டு வர முடியும்?

நக்கீரன்:

கடந்த தேர்தலில் நக்ஸல் பாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இரகசிய உறவு இருந்ததாக பகிரங்கமாகவே பேசப்பட்டதே?

ராவ் பதில் :

நிச்சயமாக இல்லை. அப்படி நாங்கள் இரகசியஉறவு வைத்திருந்தோமானால் ஏன் சென்னாரெட்டி எங்களைக் கொடூரமாகக் கொல்கிறார். ஆதாரமில்லாத திட்டமிட்ட அவதூறு செய்தி அது.

நக்கீரன்:

உங்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

ராவ் பதில் :

தெலுங்கானா மக்கள் போர்க்களத்தில் வாழ்வது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் அப்பாவி மக்களை ரெய்டு நடத்தி அடக்குமுறை நடத்துவதை நிறுத்த வேண்டும்.என்கவுன்டர் என்ற பெயரில் கடந்த மாதம் மட்டும் நாப்பத்தி ஆறு பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அப்பாவி இளைஞர்களை ‘சரணடைந்து விடு இல்லை செத்து விடு’ என்று மத்தியப் படைகள் வெளிப்படையாகவே கூக்குரலிடுகின்றன. வாரங்கல் பார் அசோசியேஷன் செக்ரட்டரி பிரபாகர ரெட்டி ஏழாம் தேதி அரசின் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொன்ன ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டார். என்கவுன்டரில் நிருபர் குலாம் ரசூலைக் கொன்றனர். கலைஞர் சஞ்சீவி வாரங்கல் போலீசால் கடத்தப்பட்டார். எங்களின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. மத்திய பாரா மிலிட்டரி படைகள் உடனே வாபஸ் பெற வேண்டும்.

இது நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே உள்ள பிரச்சினை அல்ல. நிலமற்ற வேலையற்ற சுரண்டப்பட்ட அடிமைகளுக்கும் இதுவரை அடக்கி ஆண்டுவந்த அதிகார வர்க்கத்துக்கும் இடையே உள்ள பிரச்சினை.

communist naxals varavara rao. 5 leftist arrested
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe