Advertisment

“தடாவில் உங்களைக் கைது செய்தால்?” - நக்கீரன் கேள்விகளுக்கு மு.க.அழகிரியின் பரபரப்பு பதில்கள்! 

Exclusive interview with M.K.Azhagiri

1991 - 1996 அதிமுக ஆட்சி மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, தடா சட்டத்தைத் தவறான நோக்கங்களுக்காக அரசு பயன்படுத்தியது என்பதுதான். 1991 தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா, இந்த தடா சட்டத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் கைது செய்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டின. மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கலாம் எனச் சந்தேகப்படும் ஒரு நபரை இந்த சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து ஒரு வருடம் வரை எந்தவிதமான விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும். பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தைத் தமிழக அரசும் அக்காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தியது.

Advertisment

அதில் குறிப்பாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் இந்த சட்டத்தின்கீழ் அதிகம் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில், 1989 - 1991 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் உள்துறை செயலாளராக இருந்த நாகராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரி இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் அதிகாரமிக்க ஒரு நபராகப் பார்க்கப்பட்ட நாகராஜன், பத்மாநாபா கொலை வழக்கு மற்றும் ஈழத்தமிழர் வழக்கு தொடர்பாகத் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் 1997 ல் வழக்கு விசாரணையின் முடிவில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவர் கைது செய்யப்பட்ட காலத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அடுத்த கைது தி.மு.க. தலைவர் கலைஞரின் மகனான மு.க.அழகிரிதான் என பேசப்பட்ட சூழலில், அவருடன் நக்கீரன் நடத்திய உரையாடல் 14.03.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

Exclusive interview with M.K.Azhagiri

மாஜி உள்துறைச் செயலாளரும் பத்மநாபா கொலை வழக்கில் கைதானவருமான நாகராஜன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாஜி மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் தடாவில் கைதாகி மதுரை சிறையில் இருக்கிறார்.அடுத்த கைது கருணாநிதியின் மகனான மு.க.அழகிரிதான் என்ற பேச்சு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தடா கைது புகழ் ‘க்யூ பிராஞ்ச்’சிலும் இதற்கான மூவ்கள் கடந்த சிலநாட்களாக மீண்டும் நடைபெற ஆரம்பித்து உள்ளன. இச் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட மு.க அழகிரியை அவரது மதுரை வீட்டில் சந்தித்தோம். எதைப்பற்றியும் கவலைப்படாதவராக வலம் வந்த அழகிரியோடு ஒரு பேட்டி.

கேள்வி: தடா சட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Advertisment

பதில்: பஞ்சாப்பிலும் காஷ்மீரிலும் தீவிரவாதிகளை ஒடுக்கப் போடப்பட்டதுதான் இந்த தடா சட்டம். அதையே இங்கு தி.மு.க.வை அழிப்பதற்காக பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. இந்திரா காந்தியாலேயே முடியாத காரியத்தை ஜெயலலிதா செய்து பார்க்கிறார். பாவம் அவர்.

கேள்வி: நாகராஜன் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கைது நீங்களல் தான் என சொல்லப்படுகிறதே?

பதில்: எதையும் எப்பொழுதும் சந்திக்க நான் தயார். புலிக்குப் பிறந்த நான் பூனையாக மாட்டேன்.

கேள்வி: 18.2.9௦ அன்று ராமேஸ்வரம் பட்டினம்காத்தான் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

பதில்: இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நேற்றைய விசயங்களே நினைவில் இல்லாதபோது பழைய நிகழ்ச்சிகள் எப்படி ஞாபகத்தில் இருக்கும்?

கேள்வி: பட்டினம் காத்தானில் துப்பாக்கியால் சுட்ட விடுதலைப் புலி குண்டு சாந்தனைத் தெரியுமா?

பதில்: தெரியாது.

கேள்வி: தெரியாது என்கிறீர்கள். சாந்தனின் நண்பர்களான ஜார்ஜ், கபூர், அகஸ்டியன் போன்றவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள். இந்த வீட்டுக்கெல்லாம் கூட அவர்கள் வந்ததாகச் சொல்லப்படுகிறதே?

பதில்: யார் சொன்னது?

நாம்: நாகராஜன்தான்!

பதில்: அவருக்கும் எனக்கும் எந்த விதத்திலும் சண்டையோ பிரச்சினையோ இல்லையே சார்!

கேள்வி: அப்படியெனில் அவர் கொடுத்த வாக்குமூலம்?

பதில்:எங்கள் தலைவர்தான், ‘‘நாகராஜன் வாக்குமூலமே போலியானது. போலீசாராலேயே ஜோடிக்கப்பட்டது’’ எனத் தெளிவாகச் சொல்லியுள்ளாரே?

கேள்வி: சரி,பட்டினம்காத்தான் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புள்ள புலிகளையாவது தெரியுமா? எங்கேயாவது சந்தித்துள்ளீர்களா?

பதில்: புலிகள் தொடர்பே எனக்கு கிடையாது. 198௦ல் மதுரையில் முரசொலி பதிப்பு ஆரம்பிப்பதற்காக இங்கு வந்தவன் நான்.

கேள்வி: புலிகள் பெட்ரோல், டீசல், வெடிமருந்துகள் ஆகியவற்றை உங்கள் ஆதரவுடன் கடத்தியதாக க்யூ பிராஞ்ச் ஆதாரம் வைத்துள்ளதே?

பதில்: அவை அனைத்தும் போலியான ஆதாரம். தலைவரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்.

கேள்வி: நாகராஜன் ஜாமீனில் வந்த பிறகு ஏன் உங்கள் அப்பா போய்ப் பார்க்கவில்லை.?

பதில்: தலைவரிடம் அரசு ஊழியராக வேலை பார்த்ததற்காகப் போய்ப் பார்க்க வேண்டுமா என்ன?

கேள்வி: பட்டினம்காத்தான் சம்பவம் தொடர்பாக உங்கள் தலைவர்கள் ஏதேனும் உங்களைக் கேட்டார்களா?

பதில்: பேராசிரியரும் தலைவரும் பட்டினம்காத்தான் சம்பவத்தில் தொடர்பு உண்டா என கேட்டார்கள். நான் உங்களிடம் சொன்னதுபோல் அவர்களிடமும் சொன்னேன்.

கேள்வி: போலீஸ் உங்களைக் கண்காணிக்கிறதா?

பதில்: ஒருமுறை எங்க அம்மாவை சென்னைக்கு அனுப்ப ரயில்வே ஸ்டேஷன் போனேன். எனது காரை தொடர்ந்து வேறு சில கார்களும் வந்தன. அக்கார்களில் போலீஸ் இருந்ததாகச் சொன்னார்கள். இப்பொழுது எதுவும் இல்லை.

கேள்வி: முழு நேர அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?

பதில்: அரசியலே எனக்கு வேண்டாம் சார்!

கேள்வி: தடாவில் உங்களைக் கைது செய்தால்?

பதில்: தடா ஃபெயிலியர் ஆகிப் போச்சு. ஜாமீனில் எல்லோரும் வெளிய வர ஆரம்பிச்சுட்டாங்க. அதனால ஒரு கஷ்டமும் இல்லை.

MKAazhagiri Tada
இதையும் படியுங்கள்
Subscribe