Advertisment

அது ஒரு 'தடா' காலம்! ஜெ., அரசின் தொடர் கைதுகள் குறித்து துரைமுருகன் பேட்டி!!

durai murugan interview

durai murugan interview

1991 - 1996 அதிமுக ஆட்சி மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, தடா சட்டத்தைத் தவறான நோக்கங்களுக்காக அரசு பயன்படுத்தியது என்பதுதான். 1991 தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா, இந்த தடா சட்டத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் கைது செய்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டின. மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கலாம் எனச் சந்தேகப்படும் ஒரு நபரை இந்த சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து ஒரு வருடம் வரை எந்தவிதமான விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும். பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தைத் தமிழக அரசும் அக்காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தியது.

Advertisment

அதில் குறிப்பாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் இந்த சட்டத்தின்கீழ் அதிகம் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில், 1989 - 1991 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் உள்துறை செயலாளராக இருந்த நாகராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரி இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் அதிகாரமிக்க ஒரு நபராகப் பார்க்கப்பட்ட நாகராஜன், பத்மாநாபா கொலை வழக்கு மற்றும் ஈழத்தமிழர் வழக்கு தொடர்பாகத் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் 1997 ல் வழக்கு விசாரணையின் முடிவில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவர் கைது செய்யப்பட்ட காலத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட சூழலில், இவ்விவகாரம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக 7.12.1991நக்கீரன் இதழில் வெளியான துரைமுருகனின் நேர்காணல்.

Advertisment

கைதுக்குப் பயந்தவன் திமுகவில் இருக்க முடியாது - துரைமுருகன் பேட்டி...

உள்துறைச்செயலாளர் நாகராஜன் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்கிறது ‘ஜெ’ வட்டாரம். நாகராஜனை அடுத்து உள்ள ‘ஹிட் லிஸ்ட்’ டில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் திருச்சியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டச் செயலாளரும்தான் டாப்லிஸ்ட்டில் இருக்கிறார்கள் என்று கண்சிமிட்டுகிறது ரகசியப் புலனாய்வுத் துறை. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தொடர்பு கொண்ட போது அவர் விழுப்புரம் பண்ருட்டி பகுதிகளில் கட்சி சம்பந்தமான கூட்டங்களுக்குப்போயிருப்பதாக தகவல் வந்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே விழுப்புரம் கூட்டத்துக்கு ஆஜரானோம்.

வழக்கமாக எதிர்க்கட்சிக்காரர்களை கடுமையாகச் சாடும் துரைமுருகன் விழுப்புரம் கூட்டத்தில் நகைச்சுவையாகவும் உருக்கமாகவும் பேசினார்.

காவிரிப் பிரச்சனையைப் பற்றியும் ‘ஜெ’ அரசில் போலீசாரின் அவலநிலை குறித்தும் கிண்டல் அடித்த துரைமுருகனின் பேச்சை ஒரு வரி கூட விடாமல் மேடைக்குப் பின்புறம் இருந்த இரண்டு போலீசார் ‘டேப்’ செய்தனர். கூட்டம் முடிந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கட்சிக்காரர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த துரைமுருகனைச் சந்தித்தோம்.

●உங்களை ‘ஜெ’ அரசு கைது செய்யப்போவதாக பரவலாகப் பேசப்படுகிறதே?

அப்படியா! எனக்கு எதுவும் தெரியல, ‘‘இதுக்காகவா சென்னையில் இருந்து இப்படி பதட்டப்பட்டு ஓடி வந்துருக்கீங்க? கூட்டத்தைப் பாத்துருப்பீங்களே? அப்படி ஏதாவது எனக்கு தெரிஞ்சிருந்தா மேடையிலேயே அதுக்கு பதில் கொடுத்திருப்பேனே’’என்றார்.

●கோவை சாராயக் கேஸ் தொடர்பாக உங்களையும் சம்பந்தப்படுத்தி கைது செய்யப் போவதாக போலீஸ் ஸ்டேசனில் பேச்சு அடிபடுகிறது. உங்கள் கருத்து என்ன?

இதுமாதிரி யூகங்களுக்கேல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. ‘‘நான் எங்கேயும் பயந்துக்கிட்டு போய் ஓடி ஒளியல. கைது வழக்கு இதுக்கெல்லாம் பயந்தவன் தி.மு.க.வில் இருக்க முடியாது. அடுத்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கறதுக்கு கூட எங்க தலைமையிடம் அனுமதி பெற்றுத்தான் கொடுக்கணும். நாங்க காங்கிரஸ் கட்சிக்காரங்க மாதிரி ஆளாளுக்குப் பேட்டி கொடுக்க முடியாது. தலைமையும் அதை அனுமதிக்காது. இன்னும் இரண்டு நாளிலே மாவட்டச் செயலளார்கள் அவசரக் கூட்டம் நடக்கப் போகுது. அப்ப பல பிரச்சனைகளைப் பத்திப் பேசி ஒரு முடிவெடுக்க இருக்கோம். அதுக்கு இடையில நான் பேட்டி தர முடியாது.’’ என்றார்.

●காவிரி சம்பந்தமான தீர்ப்பைப் பற்றிச் சொல்ல முடியுமா?

‘‘அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லா எடுத்து வச்சு கஷ்டப்பட்டு ஒரு கோவிலைக் கட்டி முடிச்ச பிறகு, கோபுரக் கலசத்துல தண்ணியை மட்டும் தன்னோட கையால ஊத்தி கும்பாபிஷேகம் செஞ்சுப்புட்டு இந்தக் கோவிலை நாங்கதான் உருவாக்கினோம்’’ என்று சொல்வதைப் போலத்தான் இது! 1968 ஆம் வருடம் முதல் கழகஅரசு இதுவரை இருபத்தெட்டு முறை மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வராத நிலையில்தான் இறுதியாக ‘‘நடுவர் மன்றத்தை அமைத்து நியாயம் வழங்க வேண்டும் என்றகொள்கையில் உறுதியாக நின்றார்’’ கலைஞர்.

அதேபோல் நான் அமைச்சராக இருந்தபோது என் கைப்படவே எண்பது பக்கங்கள் விளக்கம் எழுதி அதை அனைத்துக் கட்சித் தலைமையில் 199௦ ஆம் ஆண்டு தூதுக் குழுவாகச் சென்று கோரிக்கை வைத்தோம்.காங்,அ.தி.மு.க. கம்யூனிஸ்ட் போன்ற அனைத்துக் கட்சிகளும் அரசு செலவில் தூதுக் குழுவில் டெல்லி சென்றது. பிறகு கலைஞர் என்னை டெல்லிக்கு அனுப்பி இந்தப் பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அமைப்பதுதான் ஒரே வழி என்று எடுத்துக் கூறச் சொன்னதின் பேரில் வி.பி.சிங். அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.

இதற்கிடையில் நடுவர் மன்ற கோரிக்கையின் தீர்ப்பு வரும் வரை இடையில் ஒரு இடைக்கால நிவாரணம் கேட்டோம். கர்நாடக அரசு அதை ஏற்க மறுத்தது. பிறகு சுப்ரீம் கோர்ட் சென்றோம். இப்படி பலமுறை கழக அரசு போராடி பெற்ற ஒரு நல்ல தீர்ப்பை இன்று அவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ‘‘காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன’’ கதைதான் காவிரிப் பிரச்சனையில் நடந்திருக்கிறது என்றார் துரை முருகன்.

admk App exclusive
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe