Advertisment

பா.ஜ.க.வின் வெறியாட்டம்! தாராவி மக்களின் அபயக் குரல்...

Dharavi riot in 1993

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் பல காலங்களாக பல்வேறு காரணங்களுக்காக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பம்பாய் நகரில் தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய, மகாராஷ்டிராவின் தமிழகம் என அழைக்கப்படும் தாராவி மீது நடத்தப்பட்ட வன்முறைகள் வரலாறு நெடுக காணக்கிடைக்கின்றன. அவ்வாறு, 1993ல் பா.ஜ.க. தாராவி மக்கள் மீது நடத்திய வெறியாட்டத்தை நக்கீரன் 21.01.1993 தேதியிட்ட இதழில் பதிவு செய்துள்ளது.

Advertisment

Dharavi riot in 1993

பம்பாய் வெறியாட்டம்!

கலவரங்களுக்குப் பெயர் போன பம்பாய் நகரில் மீண்டும் பதட்டம். ரிசர்வ் போலீஸின் நான்கு துருப்புகள். மூன்று உதவி கமிஷனர்கள், போதாக்குறைக்கு ஆயிரக்கணக்கில் போலீஸார் என்று முகாமிட்டும் கொந்தளிப்பு தணியவில்லை. ஏ.கே.47 துப்பாக்கிகளின் சீற்றம் மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

Advertisment

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியிலும், ஜோகேஸ்வரியிலும் ஊரடங்கு உத்தரவு. இராணுவத்தினரின் பூட்ஸ்கால்களைத் தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. நாற்பது வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த தமிழர் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்து விட்டன. அகதிகளாய் சென்னை திரும்பிய தமிழர்களை நாம் சந்தித்தபோது அதிர்ச்சியடைந்தோம்.

தாராவியில் பிஸினஸ் செய்து பிழைத்து வந்த அல்லாப்பிச்சை நம்மிடம், ‘‘கட்டிக்க மாத்துத் துணி கூட இல்லாம ஒடி வந்திருக்கோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அளவே கிடையாது. பெரும்பாலான தமிழர்கள் ரயில்வேலயும், நேவிலயும் வேலை பாக்குறவங்க. சொந்த வீட்டையும், சாமான்களையும் அங்கேயே போட்டுட்டோம். இனி என்ன பண்ணி வாழப் போறோம்னு தெரியல. இவ்வளவுக்கும் பி.ஜே.பி.யும், சிவசேனாவும்தான் காரணம். மஹாராஷ்டிர அரசாங்கமும் அலட்சியமா இருந்துட்டாங்க. உசிர கைல பிடிச்சுக்கிட்டு ரண வேதனைப் பட்டுக்கிட்டு இருக்க முடியல. அதான் அகதிங்க மாதிரி இங்க தஞ்சம் வந்திருக்கோம்’’ என்றார் சோகமாக.

அல்லாப்பிச்சை தப்பி ஒடி வந்த அதே நாளில் அவரைப் போன்ற முந்நூறு தமிழர்கள் குடும்பங்களும் சென்னை வந்து சேர்ந்தன. இவர்களில் பெரும்பாலோனோர் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு முன்பும் அலறி அடித்துக் கொண்டு சென்னை வந்துசேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகும்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நஹ்ருதீன் நம்மிடம், ‘‘நான் நேவில வேலை பாத்தவன் சார். ரொம்ப வருஷமா பாம்பேல இருக்கேன். இப்ப உசிருக்கு பயந்துக்கிட்டு இங்க வந்துருக்கேன். கும்பல் கும்பலா வந்து வீட்டு மேல கல் வீசறப்ப ரொம்ப திகிலா இருக்கும். கதவ மூடிட்டு கப்சிப்னு இருப்போம். ஆனா அவங்க அதோட நிக்கலை. ஆஸிட் ஊத்தின ‘பல்பால’ அடிச்சாங்க. அரிவாள், கத்தி, கம்பு மட்டும் இல்லாம துப்பாக்கியோடும் வந்தாங்க. பல குடிசைகளை மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டாங்க. பல வீடுங்கள தரை மட்டமா இடிச்சுட்டாங்க. நாங்ககளாவது பரவாயில்லை. தப்பி வந்துட்டோம். ரயிலுக்குக் கூட காசில்லாம பல தமிழர் குடும்பங்கள் அங்கேயே இருக்கு. அவங்க நிலைமைய நெனைச்சாதான் கவலையா இருக்குது’’ என்றார் இன்னும் சோகமாக.

இவ்வளவு களேபரங்களுக்கும் பாரதிய ஜனதாவும், சிவசேனாவும்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதை உறுதி செய்வது போல பாரதிய ஜனதாவும் சில சித்து வேலைகளைச் செய்துள்ளது. பம்பாயின் பிரதான பகுதியான தொண்ணூறுஅடி சாலையில் மயான அமைதி. நல் பஜார், பெண்டி பஜார், டோங்ரி போன்ற பகுதிகளில் ராணுவத்தின் பலத்த பாதுகாப்பு. இவ்வளவையும் மீறி எட்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தப்பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு எட்டு மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வரக் கூடாது என்று போலீஸார் கறாராக சொல்லி விட்டார்கள். ஆனாலும் தென் பம்பாய், வட பம்பாய் பகுதிகளில் பாரதிய ஜனதா செய்த அட்டகாசத்தை ராணுவத்தாலும் அடக்க முடியவில்லை.

அதாவது நூற்றி முப்பதுக்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியும் அடங்காத கூட்டம் ஒரு பக்கம்; எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் மக்கள் ஒரு பக்கம். இந்த இக்கட்டான நிலையில்தான் தென் பம்பாய், வட பம்பாய் பகுதிகளில் பாரதிய ஜனதாவினரின் ‘மஹா ஆரத்தி’ பூஜை நடந்துள்ளது.

பாரதிய ஜனதாவின் பூஜையைக் கண்டுகொள்ளாதது போலவே, கலவரத்தை அடக்குவதற்கும் அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. போலீஸாரே பல இடங்களில் அப்பாவி இளைஞர்களை கைதுசெய்து சித்ரவதை செய்தனர். தாராவித் தமிழ் இளைஞர்கள் சிலரை கமிஷனர் ஸ்ரீகாந்த்பந்தே கைது செய்துள்ளார்.பிறகு பெண்கள் கூட்டமாய் சென்று புலம்பிய பிறகுதான் அந்த இளைஞர்களை வெளியே விட்டனர்.

தப்பி ஒடிவந்த தமிழர்களில் தாராவி ஜனதா தளத்தின் பகுதிச் செயலாளரான கோல்டன்கச்சியும் ஒருவர். அவர் நம்மிடம், ‘‘இந்த கலவரத்துல போலீஸ் ஒரு சைடாகத்தான் நடந்துட்டாங்க. ஆரம்பத்துலயே சரியா கவனிச்சிருந்தா சால்வ் பண்ணியிருக்கலாம். லேடீஸ்னு கூடப் பார்க்காம பல பெண்களை ஸ்டேஷன்லயே வெச்சு மிரட்டினாங்க. எங்கள மாதிரி அப்பாவி இளைஞர் களைக் கூட்டிட்டுப்போய் மிரட்டினாங்க. தீ வெச்ச சமூக விரோதிகளை கண்டுக்கவே இல்லை. நாங்க அங்கேயே இருந்திருந்தா இந்நேரம் பிணமாயிருப்போம். அந்த அளவுக்கு கொந்தளிப்பு அதிகமா இருக்கு.ஆனாலும் கலவரத்த அடக்க பம்பாய் போலீசுக்குத் துப்புக் கிடையாது’’ என்றார் ஆவேசமாக. ஆனால், ராணுவ அமைச்சர் சரத் பவாரோ, ‘‘கொந்தளிப்பு என்ற வார்த்தையை ஏற்பதற்கில்லை’’ என்று மறுத்துப் பேசியுள்ளார்.

பி.ஜே.பி., சிவசேனா மட்டுமின்றி சில தாதாக்களும், தனியார் காண்ட்ராக்டர்களும் இந்தக் கொடூரச் செயல்களைச் செய்துள்ளனர். ஒரு சில காண்ட்ராக்டர்கள் இதுதான் சாக்கென்று தாங்கள் பட்டா போடுவதற்கென்று கண் வைத்திருந்த இடங்களில் உள்ள குடிசைகளையும் கொளுத்தியுள்ளனர்.

தாதாக்களோ பிரமுகர்கள் சிலரை கடத்தும் அளவுக்கும் துணிந்து விட்டனர். தப்பி வந்தவர்களில் ஒருவரான கட்டித் தங்கம் என்ற வயதான மூதாட்டி நம்மிடம், ‘‘கடைசி காலத்துல வாழ விடாம விரட்டிட்டாங்க. அடுத்த வேளைசோத்துக்கே வழியில்லை. அந்த ஆண்டவன்தான் எங்களைக் காப்பாத்தணும்’’ என்றார் அழாத குறையாக.

ரயில்வே தொழிலாளியான முஹைதீன், ‘‘காசு உள்ளவங்க, சொந்தம் உள்ளவங்க எப்படியாச்சும் பொழச்சிப்பாங்க. என் மாதிரி ஆளுங்க ஒண்ணும் இல்லாதவங்க நாங்க அரசாங்கத்ததான் நம்பியிருக்கேன். அவங்களும் கை விட்டுட்டா பிச்சை எடுக்க வேண்டியதுதான்’’ என்றார் விரக்தியாக. இவர்களை திருநெல்வேலி பகுதிக்கு அனுப்ப மாஜி சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் ரயில்வே அதிகாரிகளிடம் சண்டை போட்டு ‘ஸ்பெசல் கோச்’ ஏற்பாடு செய்தார்.

யார் செஞ்ச புண்ணியமோ ஒரு வழியா தப்பி வந்துட்டோம். பொண்டாட்டியோட தாலிய அடமானம் வெச்சுதான் இனி பொழப்ப நடத்தனும்’’ என்று நொந்துபோய் கூறினார் நாகூரான். இவரைப் போலவே தர்மராஜ், பாஸ்கர், முகமது ஆகிய இளைஞர்களும் கண்ணீர் விடாத குறையாக நம்மிடம் புலம்பியபோது நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. கனத்த இதயத்தோடு அவர்களைப் பிரிந்த நமக்கு இரண்டு உண்மைகள் புரிந்தன.

ஒன்று - அயோத்தியில் பற்றிய தீயை அணைக்காமல் பரவவிட்ட நரசிம்மராவ் அரசே இந்த கலவரங்களுக்குக் காரணம் என்பது. இரண்டு - சொந்தநாட்டின் அகதிகளாய் தமிழகம் வந்துள்ள தமிழர்களுக்கு ஜெயலலிதா அரசு எந்த மீட்பு நல நடவடிக்கைகளையும் எடுக்காதது.

riot Dharavi App exclusive
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe