நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது மதிய உணவுத் திட்டம். காமராஜர் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1982-ல் இதை சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவுபடுத்தினார். தொடர்ந்து கலைஞர், ஜெயலலிதா என அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் பல்வேறு மேம்பாடுகளைச் சந்தித்தது மட்டுமின்றி, திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த சமூகநலத் திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகவும் அமைந்தது சத்துணவுத் திட்டம்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக்கைத் தொடங்கி மது விற்பனையின் வருமானத்தின் மூலம் ஈடுசெய்தார். இன்று மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேகவேகமாகத் திறக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மாந
நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது மதிய உணவுத் திட்டம். காமராஜர் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1982-ல் இதை சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவுபடுத்தினார். தொடர்ந்து கலைஞர், ஜெயலலிதா என அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் பல்வேறு மேம்பாடுகளைச் சந்தித்தது மட்டுமின்றி, திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த சமூகநலத் திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகவும் அமைந்தது சத்துணவுத் திட்டம்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக்கைத் தொடங்கி மது விற்பனையின் வருமானத்தின் மூலம் ஈடுசெய்தார். இன்று மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேகவேகமாகத் திறக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 8,909 சத்துணவு மையங்களை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம், 58 லட்சத்திற்கும் அதிகமான ஏழை, எளிய மாணவர்கள் பயனடைகின்றனர். தற்போது வெளியான அறிவிப்பு நடைமுறைக்கு வருமானால் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் நேரடியாக பாதிப்படைவார்கள். மேலும், இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக பல லட்சம் மாணவர்கள் பயன்பெற முடியாத சூழலே உருவாகும்.
இதுபற்றி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நூர்ஜகானிடம் பேசியபோது, ""1992-ஆம் ஆண்டு வெளியான அரசாணையின்படி, 25 மாணவர்களுக்கும் குறைவான பயனாளர்களைக் கொண்ட சத்துணவு மையங்களை மூடுவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதாவது, அருகாமை மையங்களோடு இணைத்து, அங்கு உணவு சமைத்து கொடுத்தனுப்பும் முடிவுதான் அது. ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் கண்காணிப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் என மூன்றுபேர் பணி செய்கின்றனர். ஒரு சத்துணவு அமைப்பாளர் மூன்று மையங்கள் வரை மேற்பார்வையிட வேண்டிய நிலைமை இருக்கிறது. சமீபத்தில் வரையறுக்கப்பட்ட ஊதியம், பதவி உயர்வு, பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒன்பது நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை அதில் வலுவாக இடம்பெற்றது.
தற்போது, சத்துணவு மையங்களை மூடுவதன் மூலம் காலிப்பணியிடங்களே இல்லாத நிலையை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. இதற்கு நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்கின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்காக ஒரே மையத்தில் உணவு சமைப்பது பல்வேறு சிக்கல்களுக்கே இட்டுச்செல்லும். உணவை வாகனங்களில் வைத்து எடுத்துச் செல்லும்போது அதில் நச்சுத்தன்மை ஏற்பட்டாலும், மிகப்பெரிய அழிவு வேலையாக முடியும். நிதிப்பற்றாக்குறை என்ற பெயரில் ஆட்குறைப்பு வேலையில்தான் அரசு கவனம் காட்டுகிறது''’என்றார் கோபமாக.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொருளாளர் பேயத்தேவன் நம்மிடம், ""சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில், மூன்று மையங்களுக்கான உணவை ஒரே பெண் சமைத்தபோது, மேலே கொட்டிக்கொண்டு விபத்துக்குள்ளானார். இதுபோன்ற பல சிக்கல்களைச் சுட்டிக்காட்ட முடியும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 821 சத்துணவு மையங்கள் மூடப்பட இருக்கின்றன. அதேபோல் வேலூர், சிவகங்கை, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஐந்நூறு மையங்கள் மூடப்படவுள்ளன. சத்துணவுத் திட்டத்திற்காக மட்டுமே ஆண்டொன்றுக்கு ரூ.1,624 கோடியை மாநில அரசு நிதியாக ஒதுக்குகிறது. மத்திய அரசு ரூ.446 கோடி ஒதுக்குகிறது.
சத்துணவுத் திட்டத்திற்கான நிதியில் 58 சதவீதத்தை சத்துணவுப் பணியாளர்களுக்கும், 42 சதவீதத்தை திட்டத்தை அமல்படுத்துவதற்கும் செலவிடுவதாக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்திருக்கிறார். உண்மையில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் இயங்கும் இயக்குனர் முதல் கடைமட்ட ஊழியர் வரை இந்த 58 சதவீதத்தில் இருந்துதான் ஊதியம் போகிறது. ஏற்கெனவே பள்ளிகள் தனியார் மயமாகிவிட்ட சூழலில், அரசுப் பள்ளிகளை நம்பியிருக்கும் எஞ்சிய குழந்தைகளையும் விரட்டும் போக்காகவே இது முடியும்''’என்றார் அவர். இதுதொடர்பாக சமூகநலத் துறைக்கான ஆணையர் அமுதவல்லியைத் தொடர்புகொண்ட போது, பேச முடியவில்லை.
சத்துணவுத் திட்டம் ஒரு மாபெரும் சமூக இயக்கம். வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக ஏழை, எளிய குழந்தைகளை பள்ளிகளை நோக்கி ஈர்த்து, அவர்களின் அறிவுப் பசியைப் போக்கிய ஒப்பற்ற திட்டம். இந்த சேவையை முடக்குவற்கும், அரைக்கோடி குழந்தைகளின் வயிற்றில் அடிப்பதற்கும் வித்தியாசமில்லை. அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
-ச.ப.மதிவாணன்