வட இந்தியாவில் புகழ்பெற்ற பாடகராக விலங்கும் அசாமை சேர்ந்த ஜூபின் கார்க், கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்ற நிலையில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்வதற்காக படகில் சென்ற போது நீரில் குதித்து நீந்திய போது மூச்சுத்திணறி நீரில் மூழ்கி இறந்தார். இது வட இந்திய மக்களை பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. பின்பு ஜூபின் கார்கின் உடல் சிங்கப்பூரிலே உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததை அடுத்து இங்கும் இரண்டாவது முறையாக உடற்கூராய்வு செய்யப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது. 

Advertisment

இவரது இறுதி ஊர்வலத்தில் ஏகப்பட்ட பேர் கலந்து கொள்ள அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் அசாம் மாநிலமே ஸ்தம்பித்து போனது. மேலும் இவரது மறைவையொட்டி அங்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஊர்வலத்தின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தாண்டி அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில், 6 ஏக்கர் நிலப்பரப்பில் அவருக்கு நினைவிடம் அமைக்க அரசு முன்னெடுப்பு எடுத்து வருகிறது. இதனிடையே அவரது மரணத்தில் குழப்பம் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அசாம் அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இதன் விசாரணை தொடர்ந்து வருகிறது. மேலும் சிஐடி போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போக அசாம் அரசு சிங்கப்பூர் அரசை உதவிக்கு நாடி வருகிறது

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஜூபின் கார்கின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். அடுத்து ஜூபின் கார்க் பங்கேற்க சென்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜூபின் கார்க்கோடு சிங்கப்பூர் சென்றிருந்தவர்கள். கைது நடவடிக்கை ஒரு புறம் இருக்க ஜூபின் கார்கின் மனைவி அதிர்ச்சி தரும் தகவல்களை ஒரு தனியார் செய்தி ஊடகத்திடம் பேட்டி கொடுத்திருந்தார். அதாவது, ஜூபின் கார்க் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு அவருடன் தான் பேசியதாகவும் அப்போது அடுத்த நாள் கடலுக்கு செல்லும் எந்த திட்டமும் இல்லை எனவும் கூறி, மேலும் அவர் வலுக்கட்டாயமாக்க அழைத்துச் சென்றிருக்கலாம் எனவும் கூறியிருந்தார். இது இந்த வழக்கில் மேலும் ஒரு பரப்ரப்பை ஏற்படுத்தியது. 

அதே போல் மற்றொரு பரபரப்பு சம்பவமாக முதலில் கைதான சேகர் ஜோதி கோஸ்வாமி, வாக்குமூலம் அமைந்தது. அவர் போலிஸாரிடம், “மேலாளர் சித்தார்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மகந்தா அகியோர் ஜூபின் கார்குக்கு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம்” என்று பகீர் கிளப்பினார். இதனால் வழக்கி இன்னும் சூடுபிடிக்க தற்போது மேலும் ஒரு கைது நடந்துள்ளது. ஜூபின் கார்கின் நெருங்கிய உறவினரும் அசாமின் காவல் சேவை அதிகாரியாக இருக்கும் சந்தீபன் கார்க் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அசாமின் காம்ரூப் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். இவரும் ஜுபின் கார்குடன் சிங்கப்பூர் சென்றதாக கூறப்படுகிறது. இவரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் இந்த வழக்கில் அடுத்தடுத்து கைதாகுவதும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவருவதும் வட இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Advertisment