ஜியோ ஹாட் ஸ்டார் தளம் தனது அடுத்த வெப் சீரிஸின் ரிலீஸை அறிவித்துள்ளது. ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸ் மார்ச் 13ஆம் தேதி முதல் வெளியாகிறது. பிரபல யூடியூப்பர் ‘எருமை சாணி’ விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார்.
‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் ஒருவர், ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டிற்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே இந்த சீரிஸின் மையக்கரு.
கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.
Follow Us