'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. 

Advertisment

இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி வாழ்த்து வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் கிளப்பிற்கு யஷ் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வெளியாகும் போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் மற்றும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தின் யாஷின் கதாபாத்திர போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ அவரது பிறந்தநாளான கடந்த ஜனவரி 8ஆம் தேதி வெளியானது. அந்த வீடியோவில், கவர்ச்சியுடன் கூடிய ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது வரவேற்பையும் சில விமர்சனத்தையும் சந்தித்தது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மற்றும் அதீத வன்முறை இடம் பெற்றிருந்தது. இதுவும் விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து டீசரில் இடம் பெற்ற யஷின் புது லுக்கின் தோற்றம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘டபாகி’ வெளியிடப்பட்டது.  

இப்படம் முதலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு இந்தாண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேதியும் தள்ளிபோவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதனை படக்குழு மறுத்தது. இந்த நிலையில் அந்த தேதியில் இருந்தும் மீண்டும் தள்ளிபோவதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. அதாவது ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்சிக் படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கான சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கியது. பல வருட உழைப்பிற்கு பிறகு மார்ச் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் தீவிர மோதல் காரணமாக எங்கள் இலக்கு பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, எங்கள் பார்ட்னர்ஸ் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக, எங்கள் வெளியீட்டை மறு திட்டமிட முடிவு எடுத்துள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.     

Advertisment