வருடா வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு காதல் திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் சில படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதும் பல படங்கள் வந்த இடம் தெரியாமல் செல்வதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வரிசையில் தற்பொழுது இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கும் ‘வித் லவ்’ திரைப்படம் சுமாரா? சூப்பர் ஹிட்டா?
நாயகன் அபிஷன் ஜீவிந்த் நாயகி அனஸ்வரா ராஜனை ஒரு காபி ஷாப்பில் சந்திக்கிறார். இருவரும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம் அது. அதில் இருவரும் தங்கள் முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அதில் எதிர்பாராத விதமாக இருவரும் ஒரே பள்ளியில் ஒரே நேரத்தில் படித்த மாணவர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. இருவரின் காதலிலும் ஒரு முடிவு இல்லாமல் அப்படியே கமா போட்டு அந்த காதல் முடிவு பெற்றிருக்க, அந்த காதல் கதையை தங்கள் திருமணத்திற்கு முன்பு முற்றுப்புள்ளி வைத்து முடிக்க இருவரும் முடிவு செய்கின்றனர். இதற்கிடையே இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்படும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் முடிவெடுக்கின்றனர். இதைத்தொடர்ந்து இவர்களின் முதல் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களா, இல்லையா? பிறகு இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான அதே சமயம் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பள்ளி பருவ காதல் கதையை மையமாக வைத்துக்கொண்டு அதன் மூலம் இக்கால சந்ததியினருக்கு ஏற்ற கலகலப்பான மற்றும் அழுத்தமான நேர்த்தியான காதல் கதையை சிறப்பான முறையில் கொடுத்து அதை ரசிக்கவும் வைத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் இயக்குநர் மதன். குறிப்பாக பள்ளி பருவ காதலில் உணர்ச்சிகள் கொஞ்சமும் மாறாமல் வலிகள், போராட்டங்கள், கலகலப்பு நினைவலைகள், ஏக்கம், நட்பு ஆகியவைகளை சிறப்பான முறையில் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். அதேசமயம் நெகிழ வைக்கும்படியும் காண்பித்து பார்ப்பவர்களை கலங்கடித்து பரவசப்படுத்தி இருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/03-8-2026-02-06-18-40-05.jpg)
படம் ஆரம்பித்து சற்றே மெதுவாக நகரும் திரைப்படம் போகப்போக வேகம் எடுத்து ஏற்கனவே பார்த்து பழகிய காதல் விஷயங்களாகவே இருந்தாலும் அவை ரசிக்கும்படி அமைந்து போக போக இரண்டாம் பாதியில் மற்றுமொரு வேகம் எடுக்கும் திரைப்படம் அதன் பின்பு எங்கும் திரும்பி பார்க்காமல் விறுவிறுப்பாக சென்று அதே சமயம் கலகலப்பாகவும் காதல் ரசம் சொட்ட சொட்ட சிறப்பான படமாக அமைந்து கரை சேர்ந்திருக்கிறது. இந்த காதலர் தினத்தில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக இந்த வித் லவ் திரைப்படம் மாறி இருக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சில பல வேகத்தடைகள் தென்பட்டாலும் அவை படத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்கவில்லை. இது படத்திற்கு பிளஸ்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் தன்னை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முதல் படத்திலேயே ஒரு லவ்வர் பாய் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். நடிப்பில் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை அளவாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். நாயகி அனஸ்வரா ராஜன் நாயகனை காட்டிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவர் சைடுக்கு கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் கோல் போடுகிறார். குறிப்பாக இவரின் முதல் காதல் அனுபவம் மற்றும் தற்போதைய காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கலகலப்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பது படத்திற்கு பெரிய பிளஸாக மாறி, இவர்களது கெமிஸ்ட்ரியையும் நன்றாக ஒர்க் அவுட் ஆக செய்திருக்கிறது.
டாடா பட புகழ் ஹரிஷ் குமார் சில காட்சிகளே வந்தாலும் கவர்கிறார். பள்ளிப் பருவக் காதலியாக வரும் காவியா அணில், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவர்ந்திருக்கிறார். அதேபோல் அனஸ்வரா ராஜனின் காதலனாக வருபவரும் அவரின் தோழிகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். மற்றபடி உடன் நடித்த சச்சின் நாச்சியப்பன், ஆனந்தி, தேனி முருகன், சரவணன், சாச்சனா, சித்தார்த் உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையில் யூத்துக்கு ஏற்றார் போல் பாடல்களும் மிகச் சிறப்பான பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சூப்பர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் பள்ளி பருவ காதல் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு ரசிக்க வைத்திருக்கிறது. இவரின் சிறப்பான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகு கூட்டுகிறது.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பள்ளிப்பருவ காதல் கதையாகவே இருந்தாலும் அதனுள் ஒரு வித்தியாசமான கதையமைப்பை உள்ளடக்கி அதையும் சிறப்பான முறையில் ஜனரஞ்சகமாக கொடுத்து அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக இரண்டாம் பாதி திரைப்படம் ஒரு காதல் படத்திற்கு என்னென்ன திருப்பு முனைகள் மற்றும் கலகலப்பான மற்றும் ரொமாண்டிக் விஷயங்கள் தேவையோ அதை சரியான அளவில் நமக்குள் கடத்தி படத்துடன் நம்மை அழகாக ஒன்றவைத்து ரசிக்க வைத்திருப்பது சிறப்பான விஷயம். இந்த காதலர் தினத்திற்கு ஏற்ற சரியான வித் லவ்.
வித் லவ் - எ குட் டேட்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/04-11-2026-02-06-18-36-20.jpg)