விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் குறித்து விஷ்ணு விஷால் கூறுகையில், “ராட்சசனை தாண்டி என்ன பண்ண முடியும் எனபது தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த படம் பண்ணியிருக்கேன். ராட்சசன் படத்தை விட இது வித்தியாசமாக இருக்கும். அந்த படத்துடன் ஒப்பீடு இருந்தாலும் இது ஒரு தனிப்பட்ட அனுபவத்தை கொடுக்கும். ஒப்பீடு, எதிர்பார்ப்பு இதையெல்லாம் தாண்டி இந்த படம் பண்ணக் காரணம் படத்தின் திரைக்கதையும் படத்தில் சொல்லப்படுகிற விஷயமும் தான்.
ஆர்யன் என்ற தலைப்புக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம். படத்தின் கொஞ்ச நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தடுத்த அமிட்மெண்டுகளால் படப்பிடிப்பை தொடர்ந்து பண்ண முடியவில்லை. அந்த கொஞ்ச நாள் எடுத்த படப்பிடிப்பை வைத்து ஒரு டீசர் கட் செய்து மும்பை சென்ற பிறகு ஆமிர் கான் சாரிடம் போட்டு காண்பித்தேன். அவர் பார்த்துவிட்டு பாராட்டினார். மேலும் படத்தின் ஒன் லைன் கேட்டும் வியந்தார்” என்றார்.