ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்கு மாஸ் ஓபனிங் இருந்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இடையில் ஆமிர்கான், இப்படத்தில் நடித்தது தவறுதான் என பேசியதாக ஒரு செய்தித்தாள் இணையத்தில் வைரலானது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து ஆமிர் கான் தரப்பில் அந்த செய்தித்தாள் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆமிர் கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷாலிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த செய்தித்தாள் புகைப்படத்தை ஆமிர் கானுக்கு அனுப்பினேன். அவர் அப்படியெல்லாம் நான் எந்த மாதிரியும் பேசவில்லை என சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அந்த விளக்கம் கொடுத்தார். அவர் ரஜினி மீதுள்ள அன்பின் காரணமாகவே அந்த படத்தில் நடித்தார். அதனால் மகிழ்ச்சியாகவே அவர் உள்ளார்” என்றார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ஆர்யன், அந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் இதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தினார்.