விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதன் மூலம் இயக்குநராக களமிறங்கும் அவர், இப்படத்தை தள்ளிக்கொண்டே போட்டு வருகிறார். பட அறிவிப்பு வெளியாகி ஒராண்டை கடக்கவுள்ள நிலையில் இப்படத்தை தவிர்த்து மற்ற படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நடிகை சாய் தன்ஷிகாவை நிச்சயம் செய்துள்ள நிலையில் விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் மகுடம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் அவர், நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குநர் ரவி அரசுக்கு விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இயக்குநர் பொறுப்பை விஷாலே கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குநர் ரவி அரசோ இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் படத்திற்காக சிறப்பு வழிபாடு செய்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மகுடம் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆகஸ்டில் வெளியானது. பின்பு ஜூனில் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. துஷாரா விஜயனுக்கான படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. பின்பு டி.ராஜேந்திர ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது டி.ராஜேந்திர படப்பிடிப்பிற்கு வந்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்கம் பக்கம் விஷால் குதித்திருப்பது துப்பறிவாளன் படத்திற்கு முன்பே இப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்டதாக தெரிகிறது. விரைவில் விஷால் இது குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.