விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே மகுடம் படத்தில் இயக்குநருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இவரே மீதமுள்ள படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நடிகை சாய் தன்ஷிகாவை நிச்சயம் செய்துள்ள நிலையில் விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 14ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் விஷால் ஒரு நேர்காணலுக்காக தயாராவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால் எது தொடர்பானது பற்றி இடம் பெறவில்லை. என்னவாக இருக்கும் என வீடியோவின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பெரிய விஷயம் ஒன்றை ரிவீல் செய்யவுள்ளதாக பிக் ரிவீல்(#BigReveal) என்ற ஹேஷ் டேக்கையும் அவர் பயன்படுத்தியிருந்தார். இதனால் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வந்தனர். அதாவது அவருடைய அடுத்த படமாக இருக்குமா என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த சூழலில் தற்போது விஷால் அந்த பெரிய விஷயத்தை ரிவீல் செய்துள்ளார். அதாவது ஒரு புதிய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “உண்மை... உண்மை... உண்மை... உண்மையைத் தவிர்த்து வேறு எதுவும் பேசப்போறதில்லை. ஏன் இதையெல்லாம் சொல்லனும். எப்போதுமே இண்டர்வியூவ்னா உண்மை தான பேசணும். கரெக்ட் தான். ஒரு புது முயற்சி” எனக் கூறி விரைவில் இந்த நிகழ்ச்சி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.