மலையாள நடிகர் விநாயகன், தொடர் சர்ச்சையில் சிக்கி பேசு பொருளாகவே இருந்து வருகிறார். சினிமாவை பொறுத்தவரை மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘களம்காவல்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஜெயிலர் 2 மற்றும் ‘ஆடு 3’ மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு 3 பட படப்பிடிப்பி நடந்தது. அப்போது சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்பு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இதனிடையே அவர் விபத்து குறித்து பலரும் கருத்து தெரிவிக்கையில் கர்மாவின் விளைவே இந்த காயம் என விமர்சித்தனர். இது விநாயகனை கோபப்படுத்தியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், “வினாயகனுக்கு துணை நிற்கும் மக்கள் இப்போது அப்படியே இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் போகிறது. உங்களுடைய தாயோ தந்தையோ மனைவியோ குழந்தைகளோ இப்படி பலவீனமாக படுத்திருக்கும் போது உங்களால் குறைக்க மட்டும்தான் முடியும்.
விநாயகன் எப்போது இறக்க வேண்டும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். இந்த காயம் உங்களைப் போன்ற அசிங்கமான செயல்களை செய்யும் போது ஏற்படவில்லை. அறி​வாளி​கள் போல் நடித்​து, அறி​வில்​லாதவர்​களை நம்பி வேலை செய்​த​போது இது நடந்​தது. விநாயகன் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்த உலகில் எதுவும் மாறப் போவதில்லை. கர்மா என்றால் என்னவென்று நீங்கள் விநாயகனுக்கு கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. விநாயகன் தனது கர்மாவின் பலனை தானே சந்திப்பான். அதனால் உங்கள் சாபங்களையும் போலியான அனுதாபங்களையும் என்னிடமிருந்து விலக்கி வையுங்கள். விநாயகன் அகங்காரம் கொண்டவன் அல்ல. விநாயகன் தன்மானம் உள்ள மனிதன். காலம் என்னை கொல்லும் வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us