விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் விஜர் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பொங்கலை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி தெறி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். 

Advertisment

அட்லீ இயக்கத்தில் உருவான படம் தெறி. இப்படத்தில் விஜய்யோடு சமந்தா, எமிஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு, நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அப்படமும் தள்ளிப்போவதாக திடீரென தாணு தெரிவித்திருந்தார். இதற்கு காரணமாக புதிய படங்களின் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தின் மறுவெளியீடு தள்ளி வைப்பதாக விளக்கமளித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Advertisment

இந்த நிலையில் தெறி பட ரீ ரிலீஸுக்கான புது அறிவிப்பு தேதியை தாணு அறிவித்துள்ளார். அதன்படி வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகவும் அதற்கான ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே தேதியில் தான் அஜித்தின் மங்காத்தா படமும் ரீ ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.