தமிழில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி கைவசம் ஜெயிலர் 2, அரசன், ட்ரெயின், பாக்கெட் நாவல் என ஏகப்பட்ட படங்கள் வைத்துள்ளார். தமிழைத் தாண்டி அவ்வபோது மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் மும்மைக்கார், ஜவான் என இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது மூன்றாவதாக ஒரு படம் நடிக்கவுள்ளதாக கடந்தாண்டு நவம்பரில் தகவல் வெளியானது.
அதாவது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் இதில் நாயகியாக ஷ்ரதா கபூரும் வில்லனாக சஞ்சய் தத்தும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்ததாகவும் தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் மகிழ் திருமேனி கடைசியாக அஜித்தை வைத்து ‘விடாமுயற்சி’ படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கவுள்ளதாக தெரிகிறது. அதே போல் விஜய் சேதுபதிக்கு வரிசையாக படங்கள் லைனப்பில் இருப்பதால் இப்படம் மற்ற படங்களின் படப்பிடிப்பு பொறுத்து ஆரம்பிக்கப்படும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow Us