பிரபல ஓடிடி நிறுவனமான ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், நாகர்ஜூனா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மொத்தம் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காட்டான்’ தொடரும் அடங்கும். அதன் முன்னோட்டம் நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொடர் குறித்து விஜய் சேதுபதி தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி பகிர்ந்திருந்ததாவது, “இத்தொடர் என் நண்பன் மணிகண்டன் எழுதியது. அவரும் அஜித் என்ற டைரக்டரும் இதனை இயக்கியிருக்கிறார்கள். இந்தத் தொடர் ஒரு நன்றி உணர்ச்சி என்று சொல்லலாம். வாழ்க்கை பற்றிய தத்துவத்தை சொல்லிக்கொடுக்கும். மணிகண்டனின் எழுத்து அவ்வுளவு அற்புதமாக இருந்தது. இதில் மிகவும் ரசித்து நடித்தேன். அற்புதமான அனுபவமாக இருந்தது” என்றார்.
இத்தொடரில் நடிப்பது மட்டுமில்லாமல் அவர் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார். அது குறித்து பேசிய அவர், “நடிப்புக்கும் தயாரிப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனென்றால் தயாரிப்பில் நான் அதிகம் கவனம் செலுத்த மாட்டேன். அதில் செலுத்தினால் நடிக்க முடியாது. இருப்பினும் தயாரிப்பு செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மணிகண்டன் இதுவரை ஆக்ஷன் சீன்கள் எடுத்ததே இல்லை. அவர் எடுத்த முதல் ஆக்சன் சீன் இந்த தொடராக இருக்கும். ரிஷா என்பவர் இதில் நாயகியாக நடித்துள்ளார. இவர் நிறைய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தத் தொடரின் கதையை ஆறு பக்கத்துக்கு மணிகண்டன் எழுதி கொடுத்தார். அதை படித்ததும் ஒரு நல்ல ஃபீல் இருந்தது. அது இத்தொடரை பார்ப்பவர்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
Follow Us