நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கில் இன்றைய தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். தணிக்கை வரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், இந்த படத்தை யார் பார்த்தது? படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? போன்ற கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர். இதற்கு, தணிக்கை வாரியம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதில், மண்டல குழு தான் படத்தை பார்க்கும், இருப்பினும் தணிக்கை வாரியத்தின் தலைவர் தான் இறுதி முடிவை எடுப்பார்” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ‘படம் மறு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மறு ஆய்வு குழுவானது 20 நாட்களில் அமைக்கப்படும். இருந்த போதிலும் இவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவர்கள் வழக்கு தொடுக்காமல் இருந்திருந்தால் இப்பொது படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை அக்குழு தணிக்கை சான்று வழங்க மறுத்தால் அப்போது இவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம்’ என தங்கள் தரப்பு வாதங்களை தணிக்கை வாரியம் முன் வைத்தது.
இதற்கு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “படத்திற்கு எதிராக புகார் இருப்பதாக எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கபடவில்லை. தனி நீதிபதி இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க உத்தவிட்டதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில், தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை தரப்படவில்லை. மாறாக, தகவல்கள் மட்டுமே எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தணிக்கை வாரியத்தில் அனைத்து தகவல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் டிசம்பர் 29 க்கு பிறகு அனைத்து தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளன. தணிக்கை சான்று வழங்குவதில் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியம் கூறிய ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கியுள்ளோம். இருப்பினும் இதுவரை சான்று வழங்கப்படவில்லை. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்துவிட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும். ஆனால், இதுவரை தணிக்கை சான்று வழங்காமல் இருப்பது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, திட்டமிட்டபடி படத்தை வெளியிடாததால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், தணிக்கை வாரியத்தின் நடைமுறைகள் எங்களுக்கு மனதளவில் அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன” எனப் படக்குழு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், “படத்திற்கு சான்று தரும் வரை, புகார் அளித்தவர் யார் என்பதை வெளியில் தெரிவிக்க கூடாது” எனத் தங்கள் தரப்பு வாதங்களை தணிக்கை வாரியம் முன் வைத்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.
Follow Us