விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யின் முழு நேர அரசியலுக்கு முன் கடைசிப் படமாக இப்படம் இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை காண இருக்கின்றனர்.
முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. பின்பு விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் கிளிம்ஸ் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. கிளிம்ஸில் விஜய் போலீஸ் அதிகாரியாக கையில் கத்தியுடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதுவும் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய போஸ்டரை படக்குழு சமீபத்தில் பகிர்ந்தது. பின்பு உடனே படத்தின் முதல் பாடலான ‘தளபதி கட்சேரி’ வெளியாகவுள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில் ‘தளபதி கச்சேரி’ பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதில் பாடல் தலைப்புக்கு ஏற்ப ஒரு கச்சேரி கொண்டாட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக அவரது ரசிகர்களை குறிப்பிடும் நண்பா, நண்பி உள்ளிட்ட சில வார்த்தைகளும் இதில் இடம்பெற்றுள்ளது. இடையில் விஜய்யும் ஒரு சின்ன பகுதியை பாடியுள்ளார். ‘ஒரு மாபெரும் நாடு, அதன் வேர்களில் நம்ம வேர்வை பாரு, மரம் மேல் ஒரு கூடு, அதன் தாய் வழி சொந்தம் இந்த காடு’ என அவரது குட்டிக்கதை போல் குட்டியாக சொல்லி முடிக்கும் அவர் அடுத்து சாதி பேதம் எல்லாம் இல்லை என பாடி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அட்வைஸ் பண்ணுகிறார். குறிப்பாக சாதி பேத வரிகள் வரும் போது அரசியல் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்கள் காட்டப்படுகிறது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அவருக்கு இப்பாடலை சமர்பிக்கும் வகையில் ‘தளபதிக்கு இந்த பாட்டு’ என்ற வரிகளும் அவர் நடித்த ஹிட் படங்களின் கதாபாத்திரங்கள் மற்றும் படத்தின் பெயர்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெறுகிறது.
இப்பாடலில் விஜய்யை தவிர்த்து பூஜா ஹெக்டேவும், மமிதா பைஜூவும் நடனமாடுகின்றனர். இப்பாடலை விஜய்யை தவிர்த்து அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். அறிவு வரிகளையும் எழுதியுள்ளார். நடன அமைப்பாளராக சேகர் பணியாற்றியுள்ளார். இப்பாடல் கொண்டாட்ட குதூகலமாக அமைந்த நிலையில் தியேட்டரிலும் அவரது ரசிகர்களை இதே மனநிலையோடு விருந்தாக அமையவுள்ளது.
Follow Us