நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதாவது தணிக்கை வாரியம், ‘மண்டல குழு தான் படத்தை பார்க்கும், இருப்பினும் தணிக்கை வாரியத்தின் தலைவர் தான் இறுதி முடிவை எடுப்பார் என தெரிவித்தது. பின்பு தயாரிப்பு நிறுவனம், ‘இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளது’ என தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். ஆதனால் படத்தின் தீர்ப்பு எப்போது வரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. விஜய் அரசியல் களத்திலும் இருந்து வருவதால் சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் படத்தின் தீர்ப்பு குறித்தான தேதி வெளியாகியுள்ளது. வரும் 27ஆ தேதி காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் படத்தின் முடிவுக்கு ஒரு தீர்வு வரவுள்ளது.
Follow Us