தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்கள் சிலர், அதில் குறிப்பிடத்தக்கவர் விஜய். அவர் திரைக்கு வந்த ஆரம்ப காலங்களில், பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் பின்னாளில் சுதாரித்து, தமிழ்த் திரையில் தனெக்கென ஒரு தடத்தை உருவாக்கி, இன்று தவிர்க்க முடியாத உச்சத்தை அடைந்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலில் கால்பதித்துவிட்ட நிலையில் இனி வரும் காலங்களில் திரையில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இது அவரது ரசிகர்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர்கள் கட்சித் தொண்டர்களாக மாறிவிட்டதால் அரசியல் பிரவேசங்கள் குறித்து பேசத் துவங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ள "ஜனநாயகன்" தான் விஜயின் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசிப் படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தான் இந்த படத்தின் பாடல்கள் வெளியான சிறுது நேரத்திற்குள்ளாகவே அதிகப்படியான பார்வைகளைக் கடந்து, பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் பாடல்களில் சில வரிகள் அரசியல் பேசுவதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் வட்டாரத்திலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு முன்னதாக, அதாவது ஜனவரி 9 அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கான இசைவெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னதாக மலேசியாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், அந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உட்பட பெரும்பாலான திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
ஜனநாயகன் தான் கடைசிப்படம் இனிமேல் திரையில் நடிக்கமாட்டார் விஜய் என்று அனைவரும் கூறி வரும் நிலையில், நடிகை ஒருவர் கூறியுள்ள கருத்து திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் பி.வசுவின் மகன் சக்தி, இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் சக்தி வில்லனாக நடித்து வரும் படம் "அனலி". மூன்றாம் உலகப்போர் பற்றிய கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை தினேஷ் தீனா இயக்கியுள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள சிந்தியா லூர்டே, இந்த படத்தையும் தயாரித்துள்ளார். அனலி படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சிந்தியா, நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சிந்தியா "விஜய் மீண்டும் நடிக்க வருவார், எனது தயாரிப்பில் அவர் நடிப்பார். அவருடன் நான் இணைந்து நடிப்பேன்" என்று பேசினார். விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று சிந்தியா கூறியுள்ளது திரைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us