விஜய் தேவரகொண்டா கடைசியாக கிங்டம் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலியாக சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனாவை நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல் வெளியானது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பொதுவெளியில் இன்னும் அவர் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. குடும்பத்தினருடன் அவர் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் வழிபாடு நடத்திவிட்டு ஹைதராபாத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போது, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானதாகவும் இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விபத்து நடந்ததை உறுதிப்படுத்தி விஜய் தேவரகொண்டா அது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “கார் மோதிவிட்டது. ஆனால் நாங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறோம். நான் வெளியே சென்று வலிமையான உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டேன். எனக்கு தலை வலிக்கிறது. ஆனால் பிரியாணியும் தூக்கமும் இதை சரி செய்யாது. உங்க எல்லாருக்கும் என்னுடைய அன்புகள். செய்திகளை மன அழுத்தத்திற்கு ஆளாகவிடாதீங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.