விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக வெளியான படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனியே இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரித்து இசையமைத்தும் இருந்தார்.
இப்படம் கடந்த 19ஆம் தேதி தமிழத் தாண்டி ‘பத்ரகாளி’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றிருந்தது. தமிழில் இதுவரை பெரிதாக சொல்லப்படாத தலைமை செயலகத்தில் பணிபுரியும் புரோக்கர் வேலையை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இப்படம் குறித்து பலரும் சமகால அரசியலை விமர்சனம் செய்து காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் திரைக்கதை பரபரப்புடன் கூடிய த்ரில்லர் அனுபவத்தை கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் 24ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழ் பதிப்பான சக்தித் திருமகனும் தெலுங்கு பதிப்பான பத்ரகாளி படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றார்கள்.