விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக கடந்த மாதம் வெளியான படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனியே இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரித்து இசையமைத்தும் இருந்தார். 

Advertisment

இப்படம் தமிழத் தாண்டி ‘பத்ரகாளி’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. இதுவரை பெரிதாக சொல்லப்படாத தலைமை செயலகத்தில் பணிபுரியும் புரோக்கர் வேலையை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த பலரும் சமகால அரசியலை விமர்சனம் செய்து காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் திரைக்கதை பரபரப்புடன் கூடிய த்ரில்லர் அனுபவத்தை கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். 

Advertisment

இப்படம் கடந்த 24ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் அதிலும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இயக்குநர் ஷங்கர் கூட படத்தை ஓடிடி-யில் பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தின் தன்னுடைய கதை என சுபாஷ் சுந்தர் என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்ததாவது, “எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 3 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்பி ரைட்ஸ் வாங்கிய கதைதான் ‘தலைவன்’. அதன் SNAP shotsai குடுத்துள்ளேன், படித்துப் பாருங்கள்.

மாதவன் ஒரு இந்துத்துவ பிடிப்புள்ள வில்லன், நாட்டை சர்வாதிகாரத்துக்கு கொண்டு வரத் துடிப்பவன்.
ஹிரோவின் குடும்பம் அழிய காரணமாய் இருப்பான், அவனிடம் கூடவே ஹிரோ இருப்பான், ஹிரோவுக்கு பயிற்சி அளித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பின் ஒரு கட்டத்தில் ஹிரோ அவனுக்கு எதிராக திரும்புவான். ஹிரோ தான் சேர்த்த பணத்தை பிட்காயினாக மாற்றி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி வில்லனை எதிர்க்கிறான். ஹிரோ மீது நிதி மோசடி புகாரை உருவாக்குகிறான். ஹிரோவை பயங்கரவாதியாக சித்தரிக்கிறான். ஹிரோ வில்லனுடைய நிறுவங்களை நஸ்டத்துக்கு உள்ளாகுவது. ஹீரோவின் அம்மாவை தவறாக சித்தரித்து சிறைக்கு அனுப்புவான் வில்லன் என் கதையில்.. இதிலும் அப்படி தவறாக சித்தரித்திருப்பார்கள்.. 

Advertisment

என் கதையில் இறுதியில் வரும் வசனம் ‘உன்னுடைய மரணம் புரட்சியை விரும்பும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தும், மக்கள் கடுமையான கஸ்டம் அனுவவிப்பார்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள், உரிமைகளைப் பேச யோசிப்பார்கள், மக்களை சந்தோசப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டியதில்லை சர்வாதிகாரியாக நான் இருப்பேன்’ என்பான் மாதவன். ஹீரோ என் கதையிலும் சாக மாட்டான்.. இதில் போலவே வில்லனை கொன்றுவிட்டு தப்பிப்பான்.. வெளியில் ராணுவம் நிற்க..

என் கதையை ட்ரீம் வாரியர்ஸுக்கு அனுப்பிய சான்று இருக்கிறது, சக்தி திருமகனின் இயக்குநர் முதல் படம் அவர்களுக்குதான் செய்தார். கதை இலாகா என்கிற பெயரில், புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள், அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்? சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி? கதையை பதிப்புரிமை செய்து வைத்துள்ளேன் , டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது, வருடம் 2022. தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை. ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப் போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.