ஏஐ தொழில்நுட்பம் தற்போது பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரைத்துறையில் மறைந்த பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களை மீண்டும் திரையில் கொண்டு வர பயன்படுகிறது. அதே சமயம் இதை தவறாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் திரை பிரபலங்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக வெளியிடுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ், “இப்போது இருக்கும் பிரச்சனைகளில் ஏஐ பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. ஆனால் மனிதர்களை விட ஏஐ இப்போது கை மீறிப் போவதாக தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு விஷயத்துக்கு பயந்து கொண்டிருப்போம். இப்போது அது ஏஐ-யாக இருக்கிறது. தொழில்நுட்பம் வளர வளர சில பாதிப்புகளும் உருவாகிறது” என்றார். இவரது கருத்து தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாம் பயன்படுத்துகிற ஃபோன், கார் எல்லாவற்றிலும் ஏஐ இருக்கத்தான் செய்கிறது. அது கால்குலேட்டரில் இருந்து ஆரம்பித்துவிட்டது. அதனுடைய பீக்கில் நாம் இருக்கிறோம். மக்கள் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சிக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முன்பு ஒரு காலத்தில் மாட்டு வண்டி ஓட்டியவர்கள், பின்பு கார் வாங்கி ஓட்டுனார்கள். அதனால் தங்களை தாங்களே மாற்றிக் கொள்கிற சமூகமாகத்தான் நம்ம சமூகம் இருக்கிறது. அதனால் இந்த ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நம்ம சமூகம் மாறிக்கொள்ளும்.
இந்த ஏஐ-யால் விவசாயிகள் பலன் பெறுவார்கள். மழை எப்போது பெய்யும், வெயில் எப்போது அடிக்கும் என அது கணித்து சொல்லும். ஒரு படி மேலே போய் அதுவே வயலில் இறங்கி வேலை செய்யும். கஷ்டப்பட்டு வேலை செய்யும் மனிதர்களுக்கு அது விடுதலை கொடுக்கும்” என்றார்.
Follow Us