2021ஆம் ஆண்டு வெளியான ‘ஹாட்ஸ்பாட்’ படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கே இயக்கியுள்ளார். இதில் பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷ்ன், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி உள்ளிடோர் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் வழங்கியுள்ள இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், “முதல் கதையில் குறிப்பிட்டு ஒரு நடிகரை நாங்கள் பேசி இருப்பதாக சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. பொதுவாகவே ரசிக வழிபாட்டு மனநிலையை சொல்லியிருக்கோம். அதை இரண்டு ஸ்டார்ஸ் மூலம் சொன்னால் ஈஸியாக புரியும் என சொல்லி இருக்கோம்.
ட்விட்டரில் தம்பி ராமையா தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. அதற்கு சில பேர் மாற்று கருத்துகளும் சொல்லி இருக்கிறார்கள். அதை நான் உண்மையாகவே மதிக்கிறேன். ஆனால் சில அரைவேக்காடு பெண்ணியவாதிகளும் வைரலாகும் அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் பார்த்துவிட்டு மாற்றுக் கருத்து வைக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது படத்தை முழுதாக பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அப்போதும் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் கருத்தை சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதே போல் நான் கூறிய கருத்தை எப்படி இப்ப்ச்டி சொல்ல முடியும் என கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை, உங்களுக்கு எப்படி என்னை கேள்வி கேட்க உரிமை இருக்கிறதோ அதே போல் நான் நினைப்பதை படமாக எடுக்க ஒரு கிரியேட்டராக எனக்கு உரிமை இருக்கிறது. என் மனசாட்சிக்கு உட்பட்டு நிறைய பேரிடம் உரையாடி சொல்ல வந்த கருத்து தவறாக சென்று விடக்கூடாது என சமூக அக்கறையுடன் தான் படத்தில் பேசியிருக்கேன்” என்றார்.
Follow Us