பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் கடந்த ஐந்து வருடங்களாக கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்வு நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி உள்ளிட்ட மேடை ஏற்ற தவறிய கலைகளை கௌரவிக்கும் விதமாக அரங்கேற்றப்படுகிறது.  
 
அந்த வகையில் இந்த ஆண்டு 6ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் என மொத்தம் மூன்று நாட்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இந்த விழா நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று தொடங்கிய நிலையில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பறை இசையடித்து விழாவை தொடங்கி வைத்தனர். 

Advertisment

பின்பு மேடையில் நிகழ்வு குறித்து பேசினர். அந்த வகையில் வெற்றிமாறன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியின் தலைப்பே ஒரு அரசியல் நிலைப்பாடு. ஒரு மாற்று கலாச்சாரத்தை இந்த நிகழ்வு நிகழ்த்தியுள்ளது. இவ்வளவு பெரிய திறந்தவெளி மைதானத்தில் இந்நிகழ்வு நடப்பதும் இவ்வளவு பேர் கலந்து கொள்வதும் மிகவும் மகிழ்ச்சி. ரஞ்சித்தினுடைய ஒவ்வொரு செயல்பாடுமே ஒரு ஆழமான அரசியல் புரிதலோடும் சமூகத்தில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானதாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். 

Advertisment

இந்த நிகழ்ச்சி கலைஞர்களுக்கான மேடை அங்கீகாரம் மட்டும் கிடையாது, என்ன மாதிரியான கலைக்கு மேடை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் எந்த மாதிரியான தாக்கத்தை உருவாக்குவது என்பதும் தான். இங்கு பங்கேற்கும் கலைஞர்களுடைய இலக்கு சினிமாவோ அல்லது வேறு எதுவோ கிடையாது. அவர்களுடைய இலக்கு சமூக மாற்றத்திற்கான ஒரு போராட்டம். அவர்களோடு நாம் நிற்க வேண்டும். இதை ஒருங்கிணைக்கும் ரஞ்சித்துடனும் நிற்க வேண்டும். இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் பெரிதாக வளர வேண்டும். மாற்றம் விரைவில் வர வேண்டும்” என்றார்.