தமிழகத்தில் எப்படி ஒரு பெரியாரோ அது போல் கேரளத்தில் முதல் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியரும் களப்போராளியுமான பி கிருஷ்ணன் பிள்ளை. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் வீரவணக்கம். கம்யூனிசம் கேரளாவில் இந்த அளவு ஆழமாக அடித்தளம் அமைத்து இருக்க காரணமாக இருந்த கிருஷ்ணன் பிள்ளை எப்படி தன் கம்யூனிச சித்தாந்தத்தை அந்த மக்களிடையே பரவச் செய்தார் என்ற ஐடியாலஜியை மையமாக வைத்து ஜமீன்தார்களின் அடக்குமுறைகளைஒழித்த கதையை இந்த வீர வணக்கம் திரைப்படம் மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். இது பார்ப்பவர்களை உணர்ச்சி பொங்க ரசிக்க வைத்ததா, இல்லையா?

Advertisment

கேரளாவை ஒட்டி உள்ள கிராமங்களில் ஜமீன்தார்கள் மற்றும் நிலக்கிழார்கள் அங்கிருக்கும் விவசாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தி அவர்களை உடலளவிலும், மனதளவிலும் கொடுமைப்படுத்துகின்றனர். இதைக் கண்ட புரட்சி வீரரான பி கிருஷ்ணன் பிள்ளை எப்படி ஜமீன்களிடமிருந்து தன் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மூலம் ஏழை விவசாயிகளை மீட்டார் என்பதே இந்த வீரவணக்கம் படத்தின் கதை கரு.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையை இன்றைய காலகட்டம் மக்கள் ரசிக்கும் படி மிகவும் ராவாகவும் உண்மையாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் வி நாகேந்திரன். எந்த ஒரு இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாமல் கதைக்கு என்ன தேவையோ அதை சரிவர செய்து அதற்கேற்றார் போல் திரைக்கதையும் அமைத்து அந்த காலகட்டத்தில் மக்கள் அனுபவித்த வலி வேதனைகளை தெள்ளத் தெளிவாக அதேசமயம் உண்மைக்கு நெருக்கமாகவும் காண்பித்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். ஜமீன்களின் இந்த அராஜக செயல்களை அப்படியே எதார்த்தமாக காண்பித்து அவர்களிடம் சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். மிக மிக எதார்த்த படமாக இந்த படத்தை உருவாக்கி அதை உண்மைக்கு நெருக்கமான முறையில் திரைக்கதை அமைத்து காட்டிய இயக்குர் கதையில் இன்னும் கூட சுவாரசியத்தை கூட்டி காண்பித்திருக்கலாம்.

கிருஷ்ணன் பிள்ளையாக வரும் சமுத்திரகனி அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். இவரது கம்யூனிச சித்தாந்த வசன உச்சரிப்புகள் அதை சார்ந்த காட்சி அமைப்புகள் என கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். கம்யூனிஸ்டு கட்சி தலைவராக வரும் பரத் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இதுவரை பரத் ஏற்றிடாத ஒரு வித்தியாசமான பாத்திரமாக இது அமைந்திருக்கிறது. முக்கிய பாத்திரத்தில் வரும் பரணி கவனம் பெற்று இருக்கிறார். 97 வயதான உண்மையான போராளி மேதினி அம்மாள் படத்திலும் தோன்றி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுமே சிறப்பான முறையில் நடித்திருப்பதும் அவர்கள் அனைவரும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் ஊட்டி இருக்கின்றனர். இவர்கள் அனைவரது பங்களிப்பு நிறைவாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவ முயற்சி செய்திருக்கிறது.

Advertisment

கவியரசு ஒளிப்பதிவில் காட்சி அமைப்புகள் மிக மிக எதார்த்தம். குறிப்பாக கிராமம் சம்பந்தப்பட்ட விவசாய காட்சிகள் அடிமைப்படுத்தப்படும் விவசாயிகளின் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியையும் உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பெரம்பலூர் ரவீந்திரன், அர்ஜுனன், ஜேம்ஸ் வசந்தன் மற்றும் குட்டப்பன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த ஜமீன்களின் அவர்களிடம் வேலை செய்யும் ஏழை விவசாயிகளை கொத்தடிமைகளாக வைத்து அதேசமயம்தன் காம வெறியை போக்கிக் கொள்ள ஏழைப் பெண்களை நாசம் செய்வதை எப்படி புரட்சி வீரர் பி கிருஷ்ணன் பிள்ளை அவர்கள் தன் கம்யூனிச சித்தாந்தம் மூலம் தடுத்து நிறுத்தி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்து ஏழை விவசாயிகளுக்கு சுதந்திரத்தையும் வாங்கி கொடுத்தார் என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்திய இயக்குனர் திரைக்கதையில் இன்னமும் கூட சுவாரசியத்தை கூட்டியிருக்கலாம்.

வீரவணக்கம் - தலை நிமிர்!