சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம்’ விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், மொத்தம் 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் பெண் உயர் அதிகாரிகளும் பல்வேறு துரைகளில் சாதனை படைத்த பெண்களும் கலந்து கொண்டனர். 

Advertisment

மேலும் திரைப்பிரபலங்கள் சத்யராஜ், வசந்தபாலன், தேவயானி, ரோகினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். மேடையில் வசந்த பாலன் பேசுகையில், “இந்த மேடையில் பெண்கள் சொன்ன கதைகளை கேட்கும் பொழுது கண்கள் கலங்கிவிட்டது. மலைப்பாதையில் சென்று பிரசவம் பார்த்த அந்த டாக்டரின் சம்பவம் தமிழ்நாட்டின் அரிதிலும் அரிதானது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெண்களை சக்தியாகவும் தெய்வமாகவும் பார்க்கிறோம். மேலும் சமயம் உடமையாகவும் பொருளாகவும் பார்க்கிறோம். இப்படி பார்ப்பதனால் தான் அவர்கள் ஒரு அடிமைத்தனத்தில் இருந்தார்கள். பொருளாதார விடுதலை அவர்களுக்கு இல்லை. சமூகக் கட்டுப்பாட்டில், ஆணாதிக்கத்தில் சிக்கிக் கொண்டார்கள். அதிலிருந்து திராவிடம் என்கிற பெரியார் கொண்டு வந்த தத்துவம் மட்டும்தான் தமிழ்நாட்டில் பெண்களுக்கான முதல் கல்லை எடுத்து வைத்தது.

Advertisment

அந்த முதல் கல் தான் பெண்கள் கல்வி பெற வேண்டும் சமூக கட்டமைப்பில் விடுதலை பெற வேண்டும் பொருளாதார கட்டமைப்பில் விடுதலை பெற வேண்டும் என முன்னெடுத்தது. இப்போது பெண்கள் பெரிய இடத்தில் சக மனிதராக ஜெயித்து நிற்கிறாள். பள்ளி தேர்வில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் அதில் 90 சதவீத பெண்கள் வேலைவாய்ப்பு, திருமணம் என செல்லும் போது கடுமையான சிக்கலுக்குள் மாட்டி கொள்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து விடுதலை பெற தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது என்னுடைய பெரிய கனவு.

இன்றைக்கு இருக்கும் பெண்களுக்கு இரண்டு பிரச்சனைகள் இருப்பதாக ஒரு தகப்பனாகவும் ஒரு ஆணாகவும் உணர்கிறேன். ஒன்று கற்பு... அந்த விஷயத்தில் பெண்களுக்கு பெரிய சிக்கல் இருக்கிறது. கற்பை ஆண் பெண் இரண்டுக்கும் நடுவில் பொதுவில் வைப்போம். இரண்டாவது சோசியல் மீடியா... எல்லா சமூக வலைதளங்களிலும் பெண்களின் போட்டோக்கள் இருக்கிறது. ஆனால் அதை ஆபாசமாக மாற்றி தொந்தரவு செய்யும் ஆயிரம் கயவர்கள் இருக்கிறார்கள். அதற்காக ஒரு துளி கூட கலங்காமல் என் உடல் என் உரிமை என்று நிற்க வேண்டும். அப்படி நின்றால் தமிழ்நாடு பொருளாதார விடுதலையில் ஒரு அடி முன்னாடி நிற்கும். உங்களை வெல்ல யாராலும் முடியாது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி பெண்களுடைய வளர்ச்சி தான். 140 கோடி இந்தியாவில் 70 கோடி பெண்கள் எழுந்து நின்றால் இந்தியா பெரிய வல்லரசாக மாறிவிடும். அதை இந்த சபையில் பார்க்கிறேன். பெண்களின் வெற்றிக்கு ஒரு அண்ணனாக தகப்பனாக நண்பனாக என்னுடைய குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்றார். 

Advertisment