இப்போதைய காலகட்டத்தில் ஓடிடி தளங்களின் கைகள் பெருமளவு ஓங்கி உள்ளன. அவர்களால் பெரிய நடிகர்களின் படங்கள் கூட ரிலீசில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சூழலில் பிரபல ஓடிடி தளத்தனமான நெட் பிளிக்ஸ், தங்கள் நிறுவனத்தில் தியேட்டருக்கு பிந்தைய டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சூர்யாவின் 47வது படம், தனுஷின் 55 வது படம், அதர்வாவின் இதயம் முரளி, ரவி மோகனின் ப்ரோ கோட், தனுஷின் கர, ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன், விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2, அர்ஜுனின் பெயிரிடப்படாத படம், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் வித் லவ், கார்த்தியின் மார்ஷல், விஜே சித்து இயக்கி நடிக்கும் மார்ஷல் மற்றும் சூர்யாவின் 46வது படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன், சிறு படங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என நெட் பிளிக்ஸ்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கு, திரையரங்குகளும் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை. படத்தை எடுத்து வைத்து கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது.
ஓட ஓட சினிமாவை விட்டு விரட்டுகிறார்கள், முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்குமென்றால் இங்கே ஜனநாயகம் எங்கேயிருக்கிறது? நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் பேச்சேயில்லை. பெரு நிறுவனப்படங்களை பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம் மற்றவர்களெல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்பிலிக்ஸ் போன்ற இணையங்களும், தொலைக்காட்சி சேனல்களும், திரையரங்குகளும்.
சொந்த நாட்டிலே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை. நான்கு வருடங்களாக படம் இயக்க முடியாத நிலை. இயக்கினாலும் எங்கே விற்பது? யாரிடம் சென்று கையேந்தி நிற்பது? யார் வாங்குவார்கள்? எங்கு திரையரங்கு கிடைக்கும். என்றொரு பரிதாபமான நிலை எனக்கு மட்டுமில்லை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலமை இதுவே. நெட்பிலிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை, சிறிய படங்களை, நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களைப் புறக்கணிக்கிறது. போன ஆண்டு நெட்பிலிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்களே இணையத்தில் தேடிப்பாருங்கள். ஒரு சிறு தயாரிப்பாளராக தேசிய விருது பெற்ற இயக்குநராக நெட்பிலிக்ஸ்க்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/17/18-46-2026-01-17-13-45-05.jpg)