பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, அமெரிக்கா சென்றிருந்த போது உணவு பரிமாறிய பெண்ணிடம் சாதி கேட்டதாக அவரது அண்ணனின் சமூகவலைத்தளப் பதிவு பேசு பொருளாகியது. அதனை மறுத்து பட்டிமன்ற ராஜாவும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தனக்கேற்பட்ட சாதி கேட்கும் அணுகுமுறை குறித்து இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றும் சென்னையில் இது போன்ற அசெளகரியத்தை அனுபவித்து வருகிறேன். நீங்கள் எந்த ஊர் என்று என்னிடம் கேட்பார்கள். நான் விருதுநகர் என்பேன். உடனே நீங்கள் இந்த சாதியா? என்று கேட்பார்கள். நான் அமைதியாக இருப்பேன். வெயில் திரைப்படம் பார்த்து விட்டு, ஓ... நீங்கள் இந்த சாதியா? என்பார்கள் நான் இல்லை என்பேன்.

Advertisment

விருதுநகரில் உள்ள என் நண்பனின் அப்பாவைப் பார்க்க சென்றிருந்தேன். அங்கு வந்த ஒரு திருமண தரகரிடம் என் நண்பனின் அப்பா "இவர் தான் வெயில் திரைப்படத்தின் இயக்குநர் வசந்தபாலன். நம்ம ஊரு பையன் என்று அறிமுகம் செய்தார். நான் வணக்கம் அண்ணாச்சி என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தார்.
என் நண்பரின் அப்பாவின் காதில் உடனே குசு குசுவென என்னவோ பேசினார். அவர் இல்லை என்று மறுத்தார். உடனே அவர் அப்படியா பெரிய இடம் உடனே முடிச்சுடலாமுன்னு நெனச்சேன் என்றார்.

என்னைப் பார்த்து படம் இன்னும் பாக்கல என்றார். நான் டிக்கெட் எடுத்து தரட்டுமா என்று கேட்டேன். எதுவும் பேசாமல் கடையிலிருந்து வெளியேறினார். என்ன தப்பா கேட்டுட்டோம் என்று யோசித்தேன். நண்பரின் அப்பா "நீ என்ன ஆளுங்கன்னு கேட்டாரு, நீங்க நெனக்கிற ஆளு இல்லைன்றேன். அவங்க ஆளுங்கள்ள ஒரு நல்ல பொண்ணு இருக்காம் அதான்" என்றார். ஒரு நிமிடம் என்று சாதி பெயரிடாத கல்யாணப் பத்திரிகையை அவர் கையில் திணித்து ஆசிர்வாதம் வாங்கினேன். அங்காடித் தெரு படம் பார்த்து "ஓ ! நீங்கள் தின்னவேலி பக்கமா ? அப்ப அந்தாளுக தான ? என்பார்கள். இல்லை என்பேன். அரவான் திரைப்படம் பார்த்து விட்டு நீங்க என்ன ஆளுகன்னு தெரிந்து விட்டது என்பார்கள். அப்போதும் நான் மறுப்பேன். 

Advertisment

பதில் சொல்ல முடியும் பல இடங்களில் என் சாதியை பிறரிடம் சொல்வதில்லை என்பேன். நான் பதிலளிப்பதால் உறவு முறிந்து விடும் என்கிற இடங்களில் அமைதி காப்பேன். கூகுளிலில் சிலர் இந்தந்த பிரபலங்கள் இந்தந்த சாதி என்று பெரிய புலனாய்வு புலிகள் ரேஞ்சுக்கு ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். இவர்கள் மண்டை அழுக்குகளை எந்த ஆற்றில் கழுவுவது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.