தமிழ்சினிமாவின் திசைப்போக்கை மாற்றக்கூடியவர்களை "ட்ரெண்ட் செட்டர்" என்று கூறுவர். அப்படி பல சம்பவத்தை செய்தவர் தான் பாரதிராஜா. அதுவரை செட் அமைத்து படம் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், உண்மையான சூழல்களை படமாக்கியவர் பாரதிராஜா. இவர் தான் தமிழ் சினிமாவில் வயல்வெளிகள், காடுகள், மலைகள் என யதார்த்தமான காட்சிகளை படமாக்கியவர். தனது கதைக்களத்தின் தனித்தன்மையால் "இயக்குனர் சிகரம்" என பெயர்பெற்றவர்.
இவர் திரைத்துறையில் பயணிக்கும் ஆரம்ப காலம் தொட்டே உடன் பயணிப்பவர் பாடலாசிரியர் வைரமுத்து. வைரமுத்துவும், பாரதிராஜாவும் இணைப்பிரியாத நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் பாரதிராஜா உடல் நலக் குறைவால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது நண்பரை நேரில் சந்தித்த வைரமுத்துவின் கைகளை இருகப் பற்றிய பாரதிராஜா, விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, "இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன். என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள். 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங் கைகளுக்கிடையே நசுங்கியது. நான் மட்டுமா?. கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே. எங்கள் கிராமத்துச் சூரிய காந்திப் பூக்களும் அவர் சுகம் கேட்குமே! வைகை அலைகள் வா வா சொல்லுமே! மகா கலைஞனே!விரைவில் மீண்டு வா. ‘என் இனிய தமிழ் மக்களே’என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ‘ஆஸ்பத்திரி’க்கு வெளியே அலைபாய்கிறது காற்று" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Follow Us