வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்றவர் ஈரோடு தமிழன்பன். கவிஞராக மட்டுமின்றி நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், ஓவியர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ என பல்வேறு கவிதை படைப்பு தளங்களில் இயங்கியவர்களில் மிகவும் முக்கியமானவர்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் என பல முக்கியப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு தமிழன்பன் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவு இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தமிழன்பன் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில்,
“பேரோடும் புகழோடும் விளங்கிய
ஈரோடு தமிழன்பன்
மறைந்துவிட்டார்
கண்களில்
நினைவுகள் நீராடுகின்றன
மூத்த கவிஞர்
கலைஞர் தலைமைகொண்ட
கவியரங்குகளில் பங்கேற்றுக்
கரவொலிகளை மூட்டைகட்டி
அள்ளிச் சென்ற
முன்னணிக் கவிஞர்
பாரதிதாசன் பள்ளியில்
பயின்று வந்தவராயினும்
மரபென்ற வட்டத்தோடு
முடிந்துவிடாமல்
பன்மொழிக் கவிதை கற்று
உலக நீரோட்டத்தில்
தமிழ் கலந்தவர்
பாப்லோ நெருடாவின் பக்தர்
பன்னூல்கள் படைத்தவர்
புதுக்கல்லூரியின் பேராசிரியர்
புதுக்கவிதைக்கு ஓராசிரியர்
அவருக்கு இலக்கண
நன்னூலும் தெரியும்
எஸ்ரா பவுண்டின்
இலக்கியமும் தெரியும்
"தாலியின் பெருமை
கணவன் அறிவான்
கணவனை விடவும்
மனைவி அறிவாள்
இருவரையும் விட
மார்வாடி அறிவான்"
என்ற புகழ்பெற்ற
கவிதையை எழுதியவர்
உடலுக்கு மரணம் உண்டு
அவர் விரலுக்கு மரணம் இல்லை
தமிழன்பன்
நீண்டகாலம் நினைக்கப்படுவார்
அவரை இழந்து வாடும்
குடும்பத்தார்க்கும்
இலக்கிய அன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us