மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95வது பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூர்ந்த்து பலரும் தங்களது அனுபவங்களையும் பார்வைகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். இளம் மனங்களைத் தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். வெற்றிக்கு மனத்தாழ்மையும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை... வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisment

இதனிடையே கவிஞர் வைரமுத்து “படகுவிடும் குடும்பம் உங்களுடையது... நீங்களோ ஏவுகணை விடுத்தீர்கள். வடலூர் வள்ளலாரும் நீங்களும் ஏற்றிய அக்கினி மட்டும் அணைவதே இல்லை. எங்களுக்கு வாய்த்த இஸ்லாமிய காந்தி நீங்கள். ஜனாதிபதி மாளிகையில் கைப்பெட்டியோடு நுழைந்து கைப்பெட்டியோடு வெளிவந்த கர்ம வீரரே! மீண்டு வரும்போது அந்தப் பெட்டிக்குள் ஒன்றும் இல்லை என்பதில் உண்மை இல்லை. 130 கோடி இந்திய இதயங்களை அந்தச் சின்னப் பெட்டிக்குள் சிறைகொண்டு வந்தீரே. அப்துல் கலாம் அய்யா... அழியாது உமது புகழ்; அது இந்திய வானத்தில் எழுதப் பட்டிருக்கிறது” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment