Vaa Vaathiyaar movie Review
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்த நலன் குமாரசாமி, இந்த முறை கார்த்தியுடன் கூட்டணி போட்டு வா வாத்தியார் படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். இந்த முறை பேண்டஸி கலந்த காமெடி களத்தில் கதையை உருவாக்கி இருக்கும் நலன் குமாரசாமி அதை ரசிக்கும்படி கொடுத்தாரா, இல்லையா?
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரன் எம்ஜிஆர் இறந்த நாளன்று பிறந்த தனது பேரன் கார்த்தியை எம்ஜிஆர் போல் குணங்கள் கொண்ட ஒரு மனிதராக வளர்க்கிறார். ஆனால் கார்த்தியோ நம்பியார் போல் குணம் கொண்ட மனிதராக வளர்கிறார். வளர்ந்து பெரியவனாகி போலீஸ் வேலையில் இருக்கும் அவர், எல்லாவிதமான தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடுகிறார். இந்த விஷயங்களை தாத்தாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் கார்த்தி, ஒரு கட்டத்தில் இவரது போர்ஜரி, தாத்தா ராஜ்கிரனுக்கு தெரிய வர அவர் மனம் உடைந்து இறந்து விடுகிறார். அதன் பின் கார்த்தியின் உடலுக்குள் எம்ஜிஆரின் ஆவி புகுந்து விடுகிறது. இதைத்தொடர்ந்து கெட்டவராக இருக்கும் கார்த்திக்குள் எம்ஜிஆர் ஆவி புகுந்தவுடன் அவருக்குள் நடக்கும் அதிரடிகள் என்ன? அதன் பின் அவர் என்ன செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நலன் குமாரசாமி படங்கள் என்றாலே டார்க் காமெடி பாணியில் எதார்த்தமான திரைப்படமாக அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி கொடுத்து வரவேற்பை பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் படத்திலோ அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேண்டஸி கலந்த காமெடி ஆக்சன் கமர்சியல் படமாக இப்படத்தை உருவாக்க முயற்சி செய்து அதில் ஓரளவுக்கு வெற்றி பெற முயற்சி செய்திருக்கிறார். இது முழுக்க முழுக்க பேண்டஸி படமாகவும் இல்லாமல் காமெடி படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பயணம் செய்து பார்ப்பவர்களுக்கு சில இடங்களில் சிலிர்ப்பும் பல இடங்களில் அயர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. படத்தின் கதைக்களமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லாமல் ஏதோ ஒரு நகரத்தில் நடக்கும்படியான கதையாக காண்பித்து இருப்பது பார்ப்பவர்களுடன் ஒட்ட மறுக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை மையமாக வைத்து அதனுள் பேண்டஸி கலந்த ஹீரோயிசம் கலந்த காமெடி படமாக இதை உருவாக்க நினைத்த இயக்குநர், திரைக்கதையில் இன்னமும் கூட கவனமாக இருந்து விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.
அதேபோல் படம் முழுவதும் பிளாட்டாக பயணிப்பது சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்புமுனைகள் இல்லாமல் அப்படியே நகர்வது ஒரு பக்கம் சலிப்பு ஏற்படுகிறது. இருந்தும் கார்த்தியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் வாத்தியார் எம்ஜிஆரின் ரெட்ரோ பாடல்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் ஓரளவு ரசிக்கும்படி இருப்பது சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.
கார்த்தி வழக்கம்போல் தன் கதாபாத்திரத்திற்கு நன்றாக உழைத்து இருக்கிறார். எம்ஜிஆர் ஆக மாறும் அவர் அவருடைய மேனேரிசத்தை ஓரளவு மேட்ச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். வழக்கமாக அவரது வேலையை வழக்கம்போல் சிறப்பாக செய்து விட்டு சென்றிருக்கிறார். நாயகி கீர்த்தி ஷெட்டி வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான வேலையை வழக்கம்போல் செய்துவிட்டு சென்றிருக்கிறார். வில்லனாக வரும் சத்யராஜ் வழக்கமான வில்லத்தனம் காட்டி விட்டு சென்று இருக்கிறார். எம்ஜிஆரின் ரசிகராக வரும் ஆனந்தராஜ், எம்ஜிஆர் போல் பல்வேறு கெட்டப்புகளில் வந்து செல்கிறார். சத்யராஜின் மகளாக வரும் ஷில்பா மஞ்சுநாத் தனக்கு கொடுத்த வேலையை செய்துவிட்டு சென்றிருக்கிறார். தாத்தாவாக வரும் ராஜ்கிரன் எம்ஜிஆரின் தீவிர பக்தராக தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/16/vaava2-2026-01-16-10-00-43.jpg)
காமெடிக்கு பொறுப்பேற்று நடித்திருக்கும் கருணாகரன் அந்த வேலையை செய்யாமல் சென்றிருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வழக்கம் போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அமைந்து காட்சி அமைப்பில் தரமான படமாக மாற்றியிருக்கிறது.
ஒரு மிகப்பெரும் பேண்டஸி கலந்த அதிரடி ஆக்சன் காமெடி கலந்த கமர்சியல் படமாக உருவாகி இருக்க வேண்டிய திரைப்படத்தை சற்று குறும்பட பாணியில் இயக்கியிருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் இன்றைய ஜென்சிகளுக்கு ரிலேட் ஆவது போல் எம்ஜிஆரை இன்னமும் கூட சிறப்பாக பயன்படுத்தி இருந்தால் சில பல குறைகள் தீர்ந்திருக்கும்.
வா வாத்தியார் - இதயக்கனி இல்லை!
Follow Us