இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். மும்பையில் வந்திறங்கிய அவர் அங்கு இருக்கும் பிரபல பாலிவுட் ஸ்டூடியோவான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்டார். அவருடன் பாலிவுட் நடிகை மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸின் தலைவர் ஆதித்யா சோப்ராவின் மனைவியுமான ராணி முகர்ஜி மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானியும் உடனிருந்தனர். மேலும் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனம், பிரிட்டிஷ் திரைப்பட ஆணையம், பைன்வுட் ஸ்டுடியோஸ், எல்ஸ்ட்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் சிவிக் ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இருந்தனர். அப்போது அவர்களுடன் ஸ்டூடியோவில் உள்ள திரையரங்கில் ஒரு படம் பார்த்து பிரதமர் மகிழ்ந்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாலிவுட் படங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “பிரிட்டனில் பாலிவுட் சினிமா மீண்டும் திரும்பியுள்ளது. மேலும் வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை அது கொண்டு வருகிறது. இது இங்கிலாந்து, உலகம் தரம் வாய்ந்த திரைப்படம் தயாரிப்பதற்கான இடம் என்பதை காட்டுகிறது” என்றார். மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மூன்று பெரிய படங்களை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இங்கிலாந்தில் தயாரிப்பதாகவும் கூறினார்.
இதன் மூலம் யாஷ் ராஜ் நிறுவனம் எட்டு வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் படம் எடுக்க செல்லவுள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ படம் உட்பட பல்வேறு ஹிட் படங்களை அங்கு தயாரித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.