மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் இன்று(17.10.2025) தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பைசன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு துணை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராஃப்ட் செய்திருக்கிறார். படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி
துருவ் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் - காளமாடன் வெல்லட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.