தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகைகளாக இருந்து வருபவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. திரிஷா 1999 ம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2002-ல் ‘மௌனம் பேசியதே’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சாமி, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா, 96 போன்ற பெரிய அளவிலான வெற்றி பெற்ற படங்களில் நடித்திருந்தார். 1999 ல் தொடங்கி இன்றுவரை தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார்.
அதே நேரத்தில் 2005ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. இவர் நடித்த முதல் படமே மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். இப்படம் பட்டிதொட்டி எங்கும் மாபெரும் வெற்றியை பெற்றது. தொடர்ந்து, கஜினி, வல்லவன், பில்லா, ராஜாராணி, ஆரம்பம், தனி ஒருவன், வேலைக்காரன், அறம், விஸ்வாசம், பிகில், தர்பார், அண்ணாத்த போன்ற பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். இவ்வாறாக 2005ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி துபாயில் நடந்த கார் பந்தயத்தை பார்த்து ரசித்ததுடன், அஜித்துடன் அவர்கள் உரையாடிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இது ஒருபுறம் இருக்க, திரிஷாவும் நயன்தாராவும் கப்பல் ஒன்றில் அமர்ந்தபடி எடுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. திரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தினை ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலின் ‘வானுக்கும் எல்லையுண்டு, நட்புகில்லையே’ என்ற வரிகளுடன் பதிவிட்டுள்ளனர். தங்களின் நட்பை வெளிப்படுத்தும் விதமாக இவர்கள் வெளியிட்ட இந்த பதிவு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் லைக்குகளை பெற்றுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் இந்த இரு நடிகைகளுக்குள்ளும் பல்வேறு மனக்கசப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து வெளியிட்டிருக்கும் இந்தப் புகைப்படம் அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருப்பதையே வெளிக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow Us