சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம்’ விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், மொத்தம் 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் பெண் உயர் அதிகாரிகளும் பல்வேறு துரைகளில் சாதனை படைத்த பெண்களும் கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்பிரபலங்கள் சத்யராஜ், த.செ.ஞானவேல், வசந்தபாலன், தேவயானி, ரோகினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். மேடையில் சாதனை படைத்த பெண்களுக்கு மத்தியில் த.செ.ஞானவேல் பேசுகையில், “திட்டங்கள் போலவே திட்டங்களுக்கு வைக்கப்படுகிற பெயர்களும் ரொம்ப முக்கியமானது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பெயர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருக்கிறது. உதாரணத்திற்கு மணிமேகலை காப்பியத்தில் செவிடு, குருடு, ஊமை என இருக்காது. அதற்கு பதில் காது கேளாதோர், வாய் பேசாதோர், பார்வையற்றோர் என இருக்கும். அதுதான் தமிழ் பண்பாட்டின் உச்சம். தமிழ்நாடு அரசு வைத்திருக்கும் பெயர்களை பாருங்கள் இலவச பயணம் என வைக்காமல் கட்டணமில்லா பயணம். மகளிர் உதவித் தொகை என வைக்காமல் மகளிர் உரிமைத்தொகை. ஏன் இந்த வார்த்தைகள் ரொம்ப முக்கியமானது என பார்த்தால், ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.
என்னுடைய நண்பர் வீட்டில் அவரின் அம்மா மகளிர் உரிமைத் தொகையை வாங்க வேண்டும் என சொன்னார். அதற்கு என் நண்பன் அது கஷ்டப்படுபவர்களுக்கு கொடுப்பது, உனக்கு கிடையாது என்றான். மேலும் உன் மகன் தான் நன்றாக சம்பாதிக்கிறேன் அல்லவா அப்புறம் எதற்கு உனக்கு என கேட்டான். அதற்கு அம்மா நீ சம்பாதிப்பது என் மகனுடைய பணம் ஆனால் அரசாங்கம் கொடுப்பது என்னுடைய பணம் என பதில் அளித்தார். இதுதான் உரிமை தொகைக்கான அர்த்தம். அது தன்னுடைய பணம் என்று கருதுவது தான் சுயமரியாதை. பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது போல் திட்டங்களுக்கும் பெயர் வைக்கும் தமிழ்நாடு அரசை இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். உங்களை யாராவது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால் வெற்றி நிச்சயம் திட்டத்திலிருந்து வருகிறேன் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லும் போது ஒரு பாசிட்டிவ் உணர்வு நமக்கு கிடைக்கும். இந்தத் திட்டங்களால் தமிழ்நாடு எவ்வளவு முன்னேறியது என்பதெல்லாம் இரண்டு வருடத்திற்கு முன்பு முடிந்து விட்டது. இப்போது இந்த திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு எப்படி முன்மாதிரியாக அமைகிறது என்று தான் பார்க்க வேண்டும். இங்கு இருக்கும் திட்டங்கள்தான் வட இந்தியா மாநிலங்களுக்கு பரவி வருகிறது. ஒரு ட்ரெண்ட் செட்டராக தமிழ்நாடு இருக்கிறது.
சொல் அரசியல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பாருங்கள். திராவிட இயக்கம் என்றாலே பேச்சு என கிண்டலாகவும் கேலியாகவும் ஒரு கருத்து உண்டு. ஆனால் நாம் உரத்து சொல்ல வேண்டிய விஷயம், இங்கு பேசுவதே ஒரு அரசியல் தான். பேச்சுரிமை இங்கு பெரிய அரசியலைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் திட்டங்களும் திட்டத்திற்கு வைக்கக்கூடிய பெயர்களும் தன்னம்பிக்கை தரக்கூடியதாக அமைத்து தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுகிற தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய வாழ்த்துக்கைளை தெரிவித்து கொள்கிறேன். நான் பத்திரிகையாளராக இருக்கும்போது ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது பள்ளிகளில் மாணவிகளின் தேர்ச்சி முதலிடத்தில் இருக்கும். ஆனால் கல்லூரி விண்ணப்பங்களில் மாணவர்களின் தேர்ச்சி முதலிடமாக இருக்கும். ஆனால் இது இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. ஏனென்றால் தன்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது நான் போய் விண்ணப்பம் வாங்கிக் கொள்வேன் என தைரியமாக சொல்ல முடியும்.
நீங்கள் படி தாண்ட கூடாது என்று சொல்வீர்களா? கட்டணமில்லா பயணத்தை தருவேன், படிக்க கூடாது என்று சொல்வீர்களா? உரிமை தொகை தருவேன்...இதுபோன்று இன்னும் நூறு ஆண்டு திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். அடுத்த முறையும் இந்த மரபு தொடர வேண்டும். 1920-களில் எப்படி மகளிர்க்கு ஓட்டுரிமை கிடைத்ததோ அதேபோன்று இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு சிறகு முளைத்திருக்கிறது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/18-36-2025-12-13-13-20-20.jpg)