தெலுங்கானாவில் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்கள் சம்மக்கா - சாரக்கா. மேடாரம் பகுதியில் இருக்கும் இந்தக் கோவிலில் வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை திருவிழா நடக்கவிருக்கிறது. இதனிடையே அக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு பக்தர்கள் தங்கள் எடைக்கு நிகராக வெல்லத்தை துலாபாரத்தில் வைப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு நடிகை நாயை துலாபாரத்தில் அமர வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடிகை ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ’ படம் மூலம் பிரபலமான டினா ஸ்ராவ்யா. இவர் அக்கோயிலில் துலாபாரத்தில் அவரது நாயை அமர வைத்து அதற்கு இணையாக வெல்லங்களை வைத்துள்ளார். இது பக்தர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகவும் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை புண்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் நடிகை டினா ஸ்ராவ்யா மன்னிப்பு தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “சமீபத்தில் எனது வளர்ப்பு நாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தது. அது குணமடைந்தால் அதன் எடைக்கு நிகராக வெல்லம் செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அந்த பக்தியின் காரணமாகவே நேர்த்திக்கடனைச் செலுத்தினேன். மற்றபடி பழங்குடியின கலாச்சாரத்தையோ அல்லது பக்தர்களின் உணர்வுகளையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. யாரேனும் வருத்தமடைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்றுள்ளார்.
Follow Us