லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர் கான், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அத்துடன், ‘மோனிகா’ உள்ளிட்ட படத்தின் பாடல்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதற்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால், ரசிகர்களிடம் இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, சிலர் ஆங்காங்கே சட்டவிரோதமாக அதிக விலைக்கு ‘கூலி’ படத்தின் டிக்கெட்டுகளை விற்று வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு உயர்த்தி ‘கூலி’ படத்திற்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, சென்னையிலுள்ள சில திரையரங்குகளில், ‘கூலி’ படத்திற்கான ஒரு டிக்கெட்டின் விலை 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்கப்படுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டூர் சாலையிலுள்ள தங்கம் திரையரங்கில், அதன் நிர்வாகமே ‘கூலி’ படத்தின் டிக்கெட்டை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. திரையரங்கின் அருகே உள்ள காலி இடத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் முகாம் ஒன்றை அமைத்துள்ள திரையரங்க நிர்வாகம், 190 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டை ஊழியர்கள் மூலம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், அங்கு சென்ற ஒரு ரசிகர், திரையரங்க நிர்வாகம் முகாம் அமைத்து சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பதைத் தனது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், அந்த வீடியோவில் பேசும் ஊழியர், “கமுக்கமா வச்சிட்டு, சினிமா பார்க்கும்போதுதான் டிக்கெட்ட வெளியே எடுக்கணும்... இத போட்டோ எடுத்து ட்விட்டர்ல போடுறது, பேஸ்புக்ல போடுற வேலை எல்லாம் வச்சிக்ககூடாது... டிக்கெட் வேணும்னா கையில பணமாக கொண்டு வாங்க; அப்போதா டிக்கெட்... ‘ஜீபே’லாம் கிடையாது...” என்று சட்டவிரோதமாக விற்கும் டிக்கெட்டுக்கு காறார் காட்டுகிறார்.
நீண்ட காலமாகவே, திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது ரசிகர்களிடையே பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு எதிராக முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுகிறது. ஆனால், திரையில் ஊழல், சமத்துவம் பற்றி பேசும் பெரிய நடிகர்கள், இதுவரை இந்தப் பிரச்சனை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது வருத்தமளிக்கிறது.
சட்டவிரோத டிக்கெட் விற்பனை, ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு, பொருளாதார சுமையையும் ஏற்படுத்துகிறது. முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரல் எழுப்பினால், சட்டவிரோத டிக்கெட் விற்பனையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என சினிமா ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.