பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபவளியை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்த்துள்ளனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது திருமாவளவன் பேசுகையில், “ஆணவக்கலைக்கு எதிராக படம் பேசுகிறது. காதலுக்கு சாதி மதம் பொருளாதாரம் போன்ற எந்த வரையரையும் தேவையில்லை, இரு மனங்களே போதும் என்ற வரையறையை முன்னிறுத்தி இந்த திரைப்படத்தை கீர்த்திஸ்வரன் இயக்கி இருக்கிறார். தொடக்கத்தில் இருந்து கடைசி வரை பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் வகையில் காட்சி அமைப்புகள் உள்ளன. 

Advertisment

அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பை திரைக்கதை ஓட்டம் உருவாக்குகிறது. இறுதியாக இது எப்படி போய் முடியும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது. நகைச்சுவை ததும்ப அதே நேரத்தில் சமூகத்தில் மிக முக்கியமான நாள்தோறும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிற மிகப்பெரும் ஒரு சிக்கலை மையமாக கொண்டு பிரமாண்டமாக கீர்த்திஸ்வரண் இயக்கி இருக்கிறார். இந்த தலைமுறைக்கு ஏற்ற வகையில் திரைப்படத்தை அவர் படைத்திருப்பது படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த தலைமுறையின் உளவியலையும் அவர் நன்றாக உள்வாங்கி இருக்கிறார். ஜென்சி கிட்ஸ் என்று சொல்லப்படுகிற 21 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாள்தோறும் பேசப்படுகிற நட்பு வேறு காதல் வேறு என்ற விஷயத்தை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

ஒரு இடத்தில் நட்புக்கு மிக உயர்ந்த மரியாதை தருகிறார். அந்த நட்புதான் காதலுக்கு அடித்தளமாக இருக்கக்கூடியது என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் காண்பிக்கிறார். மானம் பெரிதா உயிர் பெரிதா என்ற உரையாடலும் ஒரு இடத்தில் வருகிறது. தன்னை நிராகரித்த ஒரு பெண்ணை அவள் இரண்டாவதாக விரும்புகிற காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று வருகிற பொழுது தனக்கு துரோகம் இழைத்து விட்டால் என்று நினைக்காமல் அவள் விரும்புகிறவர்களோடு வாழட்டும் என்று படத்தின் இறுதிக் காட்சி வரை நாயகன் போராடுவது புதிய அணுகுமுறை. இது நடைமுறையில் சாத்தியமா என சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் இதை ஒரு விவாதம் ஆக்கி இருக்கிறார் அல்லது ஒரு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருந்திருக்கிறார் இயக்குநர். இது கவனிக்கத்தக்க ஒன்று. 

Advertisment

இப்படி இருந்தால் ஒன்றும் தவறு இல்லை, தன்மானத்தை விட தன்னை விரும்பும் பெண்ணின் உயிர் முக்கியமானது என்ன நாயகன் போராடுகிறார். அதைவிட முக்கியமானதாக நாயகி இரண்டாவதாக விரும்புகிற காதலனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும், ஆனால் சூழல் இல்லை அதனால் அந்த காதலன், நீ எனக்காக திருமணம் செய்து அந்தப் பெண்ணை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் இடம் உணர்வுபூர்வமாக இருக்கிறது. அதை ஏற்க முடியாதது நம்முடைய உளவியல், ஆனால் ஏற்க வேண்டியது இந்த தலைமுறையின் பரிணாம வளர்ச்சி” என்றார்.