Advertisment

பறை என்பதிலிருந்து பறையன் சமூகம் உருவானதா? - திருமாவளவன் விளக்கம்

14 (16)

சியா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாண்புமிகு பறை’. இதில் காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ள இப்படம் பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ளது. இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

Advertisment

இந்நிகழ்வினில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசுகையில், “பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகனின் வரிகளில் தேவா அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது. மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல். இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன். 

Advertisment

பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன. இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம். இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள். பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை. அந்த கிராமத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள். எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத் தெரியும். அருப்புறுக்க தெரியும், தால் அடிக்க தெரியும். விவசாய பெருங்குடி மக்கள்தான்.

அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச் சமூகம் ஆதிச் சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது. இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும். பொது உளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது. அதைத் துடைத்தெறிய வேண்டும் என்று தான் பெரியார் கனவு கண்டார், புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்த படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனியிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை.  இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை.  இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன. அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூக ஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்ட இடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe