Advertisment

சீரியஸ் காமெடியா? இல்ல காமெடி சீரியஸா? - ‘தி ராஜா சாப்’ விமர்சனம்!

457

பாகுபலி படத்திற்கு பின் வெறும் பிரம்மாண்ட படங்களில் மட்டும் நடித்து சில சருக்கல்களையும் சில ஹிட்டுகளையும் அவ்வப்போது கொடுத்து வரும் பிரபாஸ் இந்த முறை ஹாரர் காமெடி ஜானரில் ஒரு படம் நடித்து அதன் மூலம் சங்கராந்தி ரேசில் களம் இறங்கி இருக்கிறார். அவர் எதிர்பார்த்த வெற்றியை இந்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம் கொடுத்ததா, இல்லையா?

Advertisment

பிரபாஸின் பாட்டி ஜரினாவுக்கு நினைவாற்றல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாட்டி ஜரினாவின் ஆசையை நிறைவேற்ற சிறுவயதில் காணாமல் போய்விடும் அவரது தாத்தா சஞ்சய் தத்தை தேடி கண்டுபிடிக்க செல்கிறார் பிரபாஸ். இதற்கிடையே வயது மூப்பால் இறந்துவிடும் சஞ்சய்தத் காட்டுக்குள் இருக்கும் பெரிய பங்களாவில் பேயாக புகுந்து கொள்கிறார். பிரபாஸும் அவரது காதலிகளான நிதி அகர்வாலும், மாளவிகா மோகனனும் மற்றும் அவரது நண்பர்கள் விடிவி கணேஷ் ஆகியோர் கொண்ட குழுவும் அந்த பங்களாவிற்குள் சென்று மாட்டிக் கொள்கின்றனர். உள்ளே சென்றவர்களுக்கு எப்படி வெளியே தப்பித்து வரவேண்டும் என தெரியவில்லை. உள்ளிருக்கும் சஞ்சய் தத்தின் ஆவி அவர்களை கட்டிப்போட்டு வைக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸ் அண் டீம் வெளியே தப்பித்து வந்தார்களா, இல்லையா? சஞ்சய் தத் ஆவி ஏன் இவர்களை துன்புறுத்துகிறது? அவரின் பின்னணி என்ன? பாட்டியின் ஆசை நிறைவேறியதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அரண்மனை, காஞ்சனா பட பாணியில் ஹாரர் கலந்த காமெடி பாணியில் ஒரு பிரம்மாண்ட படத்தை உருவாக்கி அதை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் மாருதி. மிக பிரம்மாண்டமாக பேன் இந்திய படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் அதிக பொருட்செட்லவில் தயாரிக்கப்பட்டு காட்சிகளும் கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட சீன்களும் பேய் சம்பந்தப்பட்ட காட்சி அமைப்புகளும் ஹாலிவுட் தரத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு பார்ப்பவர் கண்களை கவர்கிறது. ஆனால் இதையெல்லாம் நிறைவாக செய்த படக்குழு ஏனோ திரைக்கதையில் சற்றே கோட்டை விட்டு இருக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதையாக இருந்தாலும் திரைக்கதையும் அதேபோன்று பார்த்து பழகியது போல் இருப்பது படத்திற்கு மைனஸ். அதே போல் எந்த ஒரு காட்சிகளிலும் அதிக அழுத்தம் இல்லாமல் மேம்போக்காக நகர்ந்து இருப்பதும் மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

இது சீரியஸான காமெடி பேய் படமா இல்ல காமெடியான சீரியஸ் பேய் படமா என்ற குழப்பம் பார்ப்பவர்கள் மனதில் படம் முழுக்க தென்படுகிறது. சிரிக்க வேண்டிய இடத்தில் பல இடங்களில் சிரிப்பு வரவில்லை சில இடங்களில் மட்டும் வருகிறது. அதே போல் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் பல இடங்களில் சப் என்று இருக்கிறது, சில இடங்களில் பயமுறுத்துகிறது. இப்படி படம் முழுவதும் பல இடங்களில் வேகத்தடைகள் நிறைந்த காட்சி அமைப்புகளால் படத்தோடு நம்மை ஒட்ட முடியவில்லை. குறிப்பாக படத்தின் நீளமும் 3 மணி நேரத்திற்கு மேல் இருப்பதும் அயற்சி கொடுத்திருக்கிறது. இருந்தும் ஆறுதல் தரக்கூடிய விஷயங்களாக படத்திற்காக போடப்பட்ட பெரிய பங்களா செட் மற்றும் அதற்கு ஏற்றார் போல் வேலை செய்திருக்கும் காட்சி அமைப்புகள் ஆகியவை ஹாலிவுட் தரத்தில் சிறப்பாக அமைந்திருப்பது மற்றும் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி மற்றும் பாடல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பது பிரபாஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

பிரபாஸ் வழக்கம்போல் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் சிறப்பாக செய்து கவர முயற்சி செய்திருக்கிறார். அவரது முதிர்ச்சியான முக அமைப்பு சில இடங்களில் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. பாகுபலியில் இருந்த அந்த சார்ம்னெஸ் இதில் சற்று மிஸ்ஸிங். நாயகி மாளவிகா மோகன் இந்த படத்தில் கிளாமரில் கலக்கியிருக்கிறார். அதேபோல் காதல் காட்சிகளிலும் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அது பல பல இடங்களில் பிளசாக மாறியிருக்கிறது. நிதி அகர்வாலும் தன் பங்குக்கு சிறப்பான முறையில் கவர்ச்சி காட்டி காட்சிகளில் சூடு கிளப்பி இருக்கிறார். மூன்றாம் கதாநாயகி ரித்திக்கு அதிக வேலை இல்லை சில காட்சிகளில் மட்டும் வந்து கவர்ச்சி காட்டி விட்டு சென்று இருக்கிறார். பாட்டி ஜரினா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பல இடங்களில் கண் கலங்க வைத்து இருக்கிறார். விடிவி கணேஷ் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி அவ்வப்போது வந்து தன் கடமையை செய்து விட்டு செல்கிறார். தாத்தாவாக மற்றும் பேயாக வரும் சஞ்சய் தத் பல இடங்களில் மிரட்டி இருக்கிறார். அவரது அனுபவ நடிப்பு கை கொடுத்திருக்கிறது. மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவர் ஒரு வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருப்பது ஒளிப்பதிவு. கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரம். அதற்கு ஏற்றார் போல் ராஜீவனின் கலை இயக்கம் மிகச் சிறப்பானதாக அமைந்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இவர்கள் இருவருடனும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பான பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் தமன். பிரபாஸுக்கு பிறகு இவர்கள் மூவருமே இந்த படத்தின் நாயகர்களாக மாறி இருக்கின்றனர். 

பிரபாஸுக்கு இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி சுலபமாக ஆயிரம் கோடிகளை அள்ளிவிடலாம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல் ஒரு மாஸ் ஆக்சன் படம் கொடுத்தாலே அது நடந்து விடும். ஆனால் அப்படி ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு இந்த படத்தில் ஹாரர் காமெடி என்ற பெயரில் மூன்று மணி நேரம் பார்ப்பவர்களை பல இடங்களில் சோதித்து இருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. காமெடியான சீரியஸ் படமாகவும் இல்லாமல், சீரியஸான காமெடி படமாகவும் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் காட்சிகளும் பெரிதாக நம்மோடு கனெக்ட் ஆகாமல் இருப்பதும் இந்த படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. பிரபாஸ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கும்படி சில இடங்களில் கமர்சியல் காட்சிகள் நன்றாக வைத்து சில இடங்களில் காமெடி காட்சிகளும் சிரிக்கும்படி வைத்திருப்பது ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்து ஒட்டுமொத்த படமாக ஓரளவு ரசிக்க வைக்கும் காமெடி கலந்த ஹாரராக இந்த படம் அமைந்திருக்கிறது.

‘தி ராஜா சாப்’ - சுமார் மூஞ்சி குமார் சாப்!

prabhas Movie review
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe