விஜயின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதால் ரசிகர்கள் அப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச்சான்று கிடைக்காத காரணத்தினால் குறிப்பிட்ட தேதியில் அப்படம் வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, படத்திற்கு விரைவில் தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக்கோரி தணிக்கை வாரியத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியது படக்குழு. இந்த வழக்கில் இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது படக்குழு. இருப்பினும், ஏற்கனவே வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கில் உரிய நிவாரணம் பெற உயர்நீதிமன்றத்தையே அணுக அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இருதரப்பும் தங்களது வாதங்களை முன் வைத்திருந்த நிலையில், வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எந்தத் தகவலும் உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அந்த வகையில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காதது குறித்து கருத்து தெரிவித்திருந்த மோகன்.ஜி. தணிக்கை வாரியம் ஒரு படத்திற்கு சான்று அளிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் வாரியத்தின் விதிகள் மற்றும் வரம்புகள் குறித்தும் பேசியிருந்தார். இதன் நீட்சியாக, "தணிக்கை வாரியத்திற்கென்று சில விதிமுறைகள் மற்றும் கால அவகாசங்கள் உள்ளது. அந்த விதிகளை, தணிக்கை வாரியம் மீறும் போது நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றால், அதில் நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால், அதற்கு முன்னதாக நீங்கள் நீதிமன்றத்தை அணுகும் நிலையில் உங்களுக்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைப்பது கடினம் தான்" என்று கூறியிருக்கிறார்.
Follow Us