விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருந்த படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த மாதம் 9 ம் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்தது. இருப்பினும், படத்திற்குத் தணிக்கை சான்று கிடைக்காததால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, படக்குழு படத்திற்குத் தணிக்கை சான்று பெற வேண்டி உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி, படத்திற்கு யு/ஏ சான்று வழங்கத் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். இதையடுத்து, இந்த தடையை எதிர்த்துப் படக்குழு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் உரிய நிவாரணத்திற்கு உயர் நீதிமன்றத்தையே நாட உச்சநீதிமன்றம் படக்குழுவினரை வலியுறுத்தியது. இதையடுத்து, மீண்டும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், படம் மறு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு சில நாட்கள் நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்திருந்தது. மேலும், மறு ஆய்வு முடிந்தவுடன் படத்திற்கான தணிக்கை சான்றை தணிக்கை வாரியம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், படக்குழு வழக்கு தொடர்ந்ததால் தான் தணிக்கை சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தணிக்கை வாரியம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. எனவே, ஜனநாயகன் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் எந்தவித வாத மற்றும் பிரதிவாதங்களும் முன் வைக்கப்படவில்லை. அதே நேரத்தில், இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறி, இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தணிக்கை வாரியம் படத்தினை மறு ஆய்வு செய்து, விரைவில் தணிக்கை சான்றை வழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us