நீண்டகாலமாக ஒரு பெரிய வெற்றி படம் கொடுக்கும் முனைப்பில் இருக்கும் நடிகர் ஜீவா இந்த முறை சற்றே கிராமம் சம்பந்தப்பட்ட கதை மூலம் களத்தில் இறங்கி இருக்கிறார். அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெற்றுக் கொடுத்ததா, இல்லையா?

Advertisment

இளவரசுவும், தம்பி ராமையாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். ஏற்கனவே இந்த இரண்டு குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக பகை இருக்கிறது. அந்த நேரம் பார்த்து இளவரசுவின் மகள் பிரார்த்தனாவுக்கு திருமணம் ஏற்பாடு நடக்கிறது. வீட்டு வாசலில் வைத்து காலை 10:30 மணி அளவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பி ராமையாவின் தந்தை காலமாகி விடுகிறார். இறந்த தந்தையின் இறுதி ஊர்வலத்தை காலை அதே 10.30 மணிக்கு நடத்தி ஆக வேண்டும் என தம்பி ராமையா முரண்டு பிடிக்கிறார். இதனால் இந்த இரண்டு குடும்பத்திற்கும் மோதல் வெடிக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்து தன் தலைமையில் அந்தந்த காரியங்களை சரியான முறையில் செய்து வைக்க அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான ஜீவா களம் இறங்குகிறார். இதைத்தொடர்ந்து இந்த இரு வீட்டு பிரச்சனைகளை ஜீவா எப்படி சமாளித்தார்? கடைசியில் நடந்தது திருமணமா அல்லது இறுதி சடங்கா? என்பது இப்படத்தின் மீதி கதை.

Advertisment

மலையாள சினிமா பாணியில் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு சிம்பிளான கதையை எடுத்துக்கொண்டு அதை இரண்டு மணி நேர படமாக மிகவும் ஜனரஞ்சகமான முறையில் காமெடி கலந்த விறுவிறுப்பான குடும்பப் படமாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகாதேவ். அதில் அவருக்கு வெற்றி கிட்டியதா என்றால் ஓரளவுக்கு வெற்றி கிட்டியது என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒரு எதார்த்தமான சிறிய கதையை எடுத்துக்கொண்டு அதை பல்வேறு கதாபாத்திரங்கள் கொண்டு அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களுடன் கூடிய டுவிஸ்ட்டுகளை வைத்து நேர்த்தியான படமாக இந்த டி டி டி படத்தை உருவாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படம் ஆரம்பித்து சிறிது நேரம் நல்ல விறுவிறுப்பாக சென்று பிறகு இடைவேளை நெருங்கும் சமயத்தில் சற்று ஸ்லோவாகி பின்பு சென்டிமென்ட் நிறைந்த படமாக நகர்ந்து இறுதி கட்ட காட்சிகளில் மீண்டும் வேகம் எடுத்து கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சற்று சத்தமாகவும் நிறைந்த படமாக மாறி, பார்ப்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான குடும்ப படம் பார்த்த உணர்வை இந்த படம் கொடுத்திருக்கிறது. திரைக்கதையில் இன்னமும் கூட காமெடி மற்றும் விறுவிறுப்பை சிறப்பான முறையில் கூட்டி இருக்கலாம்.

ttt1

பஞ்சாயத்து தலைவராக நடித்திருக்கும் ஜீவா, தன் ஓட்டுக்காக இரண்டு குடும்பத்தையும் பகைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்த அளவு நடிப்பு தேவையோ வழக்கம் போல் அதை சிறப்பான முறையில் காண்பித்து ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் நாயகியான பிரார்த்தனா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இளவரசுவும், தம்பி ராமையாவும் போட்டி போட்டுக்கொண்டு ஈகோ சண்டை மூலம் தங்களது நடிப்பை வெறித்தனமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். பல இடங்களில் இவர்களது நடிப்பு ரசிக்க வைத்தாலும் போகப்போக சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி எப்பொழுதுதான் இவர்கள் நிறுத்துவார்கள் என்பது போல் பார்ப்பவர்களையும் உணர செய்வது இவர்களின் அனுபவ நடிப்புக்கு கிடைத்த வெற்றி. ஜீவாவின் எதிரியாக வரும் லப்பர் பந்து புகழ் ஜென்சன் திவாகர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பின் உச்சம். தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார்.

Advertisment

அதேபோல் மாப்பிள்ளையாக நடித்திருக்கும் நடிகரும் அவரது தம்பி மற்றும் குடும்பத்தாரும் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து பார்ப்பவர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இவர்கள் பேசும் கன்னியாகுமரி ஸ்லாங் மிக சிறப்பு. மற்றபடி நாயகியை ஒருதலையாக காதலிப்பவர் மற்றும் இறந்தவரின் தம்பிகளாக வரும் நபர்கள் மற்றும் அந்த ஊர்காரர்கள் என அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர். 

ttt2

பப்லு அஜு ஒளிப்பதிவில் காட்சிகள் மிக நேர்த்தி. குறிப்பாக படம் ஒரே ஒரு இடத்தில் தொடர்ந்து நடைபெறுவதை சிறப்பாக காட்சிப்படுத்தி அதை விறுவிறுப்பான முறையில் நிறைவாக கொடுத்திருக்கிறார். விஷ்ணு விஜய் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஒரே நேரத்தில் திருமண வீடு மற்றும் சாவு வீடு ஆகியவைகளை கதைக்களமாக எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நடக்கும் கதையாக இப்படத்தை உருவாக்கி அதை கலகலப்பான முறையில் சண்டை சச்சரவுகள் நிறைந்த விறுவிறுப்பான படமாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கு இந்த திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு நிறைவையும் கொடுத்திருக்கிறது. குடும்ப பிரச்சினைகளை படத்தில் அதிக நேரம் அதையே திரும்பத் திரும்ப காண்பித்து இருப்பதை மட்டும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக திரைக்கதையில் இன்னமும் கூட சுவாரசியம் மற்றும் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பான ஒரு காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் பாடமாக மாறி இருக்கும்.

தலைவர் தம்பி தலைமையில் - ஈகோ மோதல்!