கடந்த வாரம் இரண்டு அறிவிப்புகள் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஒன்று, இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு. ரெட்ஜெயண்ட் மூவீஸ் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கும் மெகா படத்தின் அறிவிப்பு. இந்த மிக முக்கிய படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்திருக்கிறது. நெல்சன் பெயர் இந்திய அளவில் சினிமா துறையில் உச்சரிக்கப்பட்டது என்றால் தமிழ்த் திரைத் துறையில் உச்சரிக்கப்பட்ட ஒரு இயக்குநர் பெயர் சிவக்குமார் முருகேசன். 

Advertisment

காரணம்... இயக்கிய முதல் படம் வெளியாகும் முன்பே கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் 'சேயோன்' படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு. அதுவும் அறிவிப்பே சிறப்பான ஒரு வீடியோவாக வெளியானது. அந்தப் படம் விருமாண்டியின் தொடர்ச்சியா என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. இதோடு நிற்கவில்லை... சேயோனுக்கு அடுத்து தான் நடிக்கும் படமும் சிவக்குமார் முருகேசனின் இயக்கத்தில் தான் என்று அறிவித்துவிட்டார் சிவகார்த்திகேயன். 

Advertisment

யாருப்பா இந்த சிவக்குமார் முருகேசன் என்று தமிழ் சினிமா உலகமும் ரசிகர்களும் கேட்டனர். அவர் இயக்கிய முதல் படமான 'தாய் கிழவி' வெளியாகிவிட்டது. இத்தனை பரபரப்புக்கும் கவனத்துக்கும் காரணம் புரிந்துவிட்டது. 

தரமான படங்கள்... பொழுதுபோக்குப் படங்கள்... என இரண்டையும் பிரித்துப் பார்ப்பார்கள் சினிமா வல்லுநர்கள். தரமான பொழுதுபோக்குப் படங்கள் அவ்வப்போது வெளியாகும். மொழி, ஆண்டவன் கட்டளை, துப்பாக்கி... இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு உதாரணங்கள் உண்டு. அவ்வப்போது தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றி அமைக்கும் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும். பதினாறு வயதினிலே, பருத்தி வீரன், காதல் கோட்டை என பல உதாரணங்கள் உண்டு. அந்தப் படங்கள் வெளியான பின் அதைப் போன்று எடுக்க வேண்டுமென பலரும் முயற்சி செய்யத் தொடங்குவர். 

Advertisment

இப்போது தமிழ் சினிமா உண்மையில் குழப்ப நிலையில் இருக்கிறதென்றே சொல்லலாம்.எந்த வகைப் படங்கள் வெற்றி பெறும் என்பதை வணிக நிபுணர்களாலும் கணிக்க முடியவில்லை. கோவிட் நேரத்தில் நடந்த ஓடிடி தாக்கத்தில் கேங்ஸ்டர் - போதை கடத்தல் - ஆள் கடத்தல் கும்பல் படங்களாக வந்தன. ஆனால் பல படங்கள் வெற்றி பெறவில்லை. பா.ரஞ்சித் தாக்கத்தில் சமூக நீதியை, சாதி ஒழிப்பைப் பேசும் படங்கள் பல வந்தன.நல்ல விசயம்தான் என்றாலும் வணிக வெற்றி வெகு சில படங்களுக்கே சாத்தியமானது. இந்த நிலை ரீ-ரிலீஸ் வழக்கத்தை நோக்கித் தள்ள, படையப்பா, கில்லி, மங்காத்தா என பெரிய நடிகர்களின் மறுவெளியீடுகள் பெரிய வசூல் செய்தன. அந்ததந்த காலகட்டத்தின் நல்ல படங்கள் மறுவெளியீடு செய்யப்படுவது ஒரு நல்ல ரசனை கலாச்சாரம் என்றாலும் தற்போது சென்னை போன்ற நகரங்களில் புதுப்படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக பழைய படங்கள் திரையிடப்படுகின்றன. சிறிய ஊர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. முன்பெல்லாம் சினிமாவை தீவிரமாக தேடிப் பார்ப்பவர்கள்தான் மலையாள படங்கள் பார்ப்பார்கள்.

ஆனால் இப்போது பொதுவான ரசனை உள்ளவர்களே 'அட நம்ம பசில் ஜோசப்பு' என்று சொல்லும் அளவுக்கு மலையாள படங்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் தாக்கம்தான் ஒரு மலையாள இயக்குனர், தமிழுக்காக பெரும் மாற்றங்கள் செய்யாமல் இயக்கிய 'தலைவர் தம்பி தலைமையில்' படம் பெற்ற வெற்றி.

இப்படி உழலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு சின்ன தெளிவை தருகிறது தாய் கிழவி. நிஜத்துக்கு நெருக்கமாக எடுக்கப்படும் படங்கள் மிக மெதுவாக நகர வேண்டும், சீரியசாக இருக்கவேண்டும் என்ற கற்பிதங்களை உடைத்து சிரிக்க சிரிக்கக் கருத்துகளையும் சொல்லியிருக்கிறது. மதுரைப் பக்கம் எடுக்கப்பட்ட படங்களை டஜன் கணக்கில் பார்த்திருக்கிறோம். 'என்னடா லந்த குடுக்குற...' 'ஏய்... வகுந்துருவேன்டியேய்...' என்று நாலு வசனங்களை வைத்துக்கொண்டு மதுரை மண்ணின் படங்கள் என்று ஏகப்பட்டவை வந்திருக்கின்றன. 'தாய் கிழவி' உண்மையாகவே மதுரையையும் தாண்டி விக்கிரமங்கலம் காடுபட்டி கிராம மக்களை, மனிதர்களை பாத்திரங்களாகக் கொண்டு வந்துள்ளது. ஊரே மிரளும் திமிர் பிடித்த, கடுகடுத்த, கிண்டலும் எள்ளலும் நிறைந்த, தைரியமான, சுயநலம் நிறைந்த, தன் காலில் நிற்கும் தாய் கிழவி பவுனுத்தாய் (ராதிகா). கரண்ட் பில் ஏறிடுமென்று பேரனை டிவி பார்க்கவிடாதவர்,.

தந்தை இறந்ததும் சொத்தைப் பிரித்துக் கேட்ட மூன்று மகன்களையும் 'த்தூ..' என துப்பி கெட்டவார்த்தையில் திட்டி விரட்டிவிட்டவர், வட்டிக்குக் கடன் கொடுத்து, வண்டி வண்டியாக வார்த்தை பேசி வசூலிப்பவர். கிழவி எப்போ சாகுமென்று ஊரே காத்திருக்கிறது, மகன்களும்தான். அப்படிப்பட்ட பவுனுத்தாய் ஒரு நாள் நினைவிழந்து போகிறார். ஊருக்கே கொண்டாட்டமாகிறது. நினைவிழந்தாலும் கையசைவில் எதையோ சொல்ல துடிக்கிறார். அது என்ன விசயம்... பவுனுத்தாயின் உயிர் பிரிந்ததா இல்லையா என்பதுதான் ரசனையும் ரகளையுமான தாய் கிழவி. 

ஒவ்வொரு சாவு வீட்டிலும் போய் ஒரே பொய்யை சொல்லி பிரச்சனைகளை கிளப்பிவிடும் கேத வீட்டுக் கிறுக்கன், ஜவஹர்லால் நேரு - ராஜிவ் காந்தி என பெயர்கள் வைத்த நம்மூர் மனிதர்கள், மூன்று பவுன் நகை குறைவாகப் போட்டதால் மனைவியை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு பொறுப்பில்லாமல் திரியும் மருமகன், கொஞ்சம் மதுவுக்காக எந்த எடுபுடி வேலையையும் செய்யத் தயாராக இருப்பவர், எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற கமல்ஹாசன் பாட்டை ஒலிக்கவிடும் சவுண்ட் செட் கமல் ரசிகர்... இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்குப் படம் நெடுக சுவாரசியமான கதாபாத்திரங்கள். திரைக்கதையை விட இந்தப் பாத்திரங்களும் பாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் இளவரசு, சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். ராதிகா சரத்குமாரின் நடிப்பை குறித்து சொல்லவேண்டுமா என்ன? 

இந்த உலகத்தை எழுதி இயக்கிய சிவக்குமார் முருகேசன் தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான வரவு. நகைச்சுவை மட்டுமல்ல போகும்போக்கில் பல முக்கியமான விசயங்களை இயல்பாக சொல்லிச் செல்கிறார். ஆங்கிலம் தெரியாதவர்களிடம் பெருமையாக ஆங்கிலம் பேசுபவர்கள், நம்மூர் சாமிகளை மறந்துவிட்டு சாய்பாபா பக்தர்களாக மாறுபவர்கள் என சமூக இயல்புகளை அசால்ட்டாக குத்திச் சொல்லும் சிவக்குமார், கல்யாணம் செய்துவிட்டோம், பிள்ளை பெற்றுவிட்டோம் என்ற  காரணத்துக்காக குடிகாரர்களுடன் பொறுப்பற்ற ஆண்களுடன் வாழத் தேவையில்லை என முக்கியமான ஒரு விசயத்தையும் கதை வழியே தொட்டுச் செல்கிறார். இப்போதிருக்கும் சூழலில் எளிய மனிதர்கள் மட்டுமல்ல நடுத்தர வாழ்வு வாழ்வோரும் கூட தங்கள் வீட்டுப் பெரியவர்களின் உயிரைக் காத்துவைக்க எவ்வளவு செலவு செய்யவேண்டியுள்ளது என்பதையும் அப்படி செலவு செய்ய முடியாதவர்கள் எடுக்க வேண்டி வரும் முடிவையும் சொல்லும் அழுத்தமான காட்சி படத்தின் முக்கிய திருப்புமுனை. படத்தின் மிக முக்கிய நோக்கமும் கருத்தும் பெண் விடுதலை என்பதே. அதை கொள்கையாக, முழக்கமாக இல்லாமல் மிக உணர்வுப்பூர்வமாக சிரிப்போடு சொல்லியிருக்கிறார். இறுதியில் பவுனுத்தாய் ராதிகா பேசும் ஒவ்வொரு வசனமும் நம்மூர் பெண்களுக்கான பாடம். 

ஒளிப்பதிவு (விவேக் விஜயகுமார்), இசை (நிவாஸ் கே பிரசன்னா), படத்தொகுப்பு (சான் லோகேஷ்) கலை (ராமு தங்கராஜ்) உள்பட படத்தில் பங்காற்றிய அனைவருமே படத்தின் பலம். தான் நடிக்கும் படங்களை எப்படி விதம் விதமாக கவனமாக தேர்ந்தெடுக்கிறாரோ அதே போல தயாரிக்கும் படங்களையும் மிகச் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கிறார் சிவகார்த்திகேயன். திறமைகளை கண்டறிந்து போற்றுதலே ஒரு பெரிய திறமைதானே! 

தாய் கிழவி... தரமான பொழுதுபோக்கு!